Home இலங்கை சமூகம் வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள்

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள்

0

Courtesy: uky(ஊகி)

வடக்கில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்று திடுக்கிடும்படியான முடிவுகளை தந்துள்ளன.

வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே கற்றலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது.

மாணவர்கள் கணித பாடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வின் ஒரு பகுதியாக கொண்டு பெறப்பட்ட முடிவுகள் இதுவரை சுட்டிக்காட்டப்படாதவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த அடைவு மட்டத்தினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் வெளிப்படையாவதும் நோக்கத்தக்கது.

மீத்திறனுடைய மாணவர் 

மாணவர்கள் புரிந்து கொள்ளல் மற்றும் வெளிப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு அவர்களை வகைப்படுத்தலாம்.

அந்த வகைப்பாட்டின் அடிப்படையில்

01) மீத்திறன் மாணவர்கள்

02) திறன் மாணவர்கள்

03) சாதாரண திறன் மாணவர்கள்

04) மெல்லக் கற்போர் என்ற நான்கு வகைப்பாட்டினை இந்த ஆய்வில் ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களிடையே கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டன.

விரைவாக புரிந்து கொண்டு தங்கள் புரிதலை விரைவாக வெளிப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மீத்திறன் மாணவர்களாக கொள்ளப்படும்.

இவர்களிடையே அதீத நினைவாற்றல் இருப்பதும் அறிந்த தகவல்களை முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு ஒப்பிட்டு பகுப்பாய்ந்து சூழலுக்கு பொருத்தமான முடிவுகளை வெளிப்படுத்துவதில் திறமையானவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

சுயமாக பாடப்பரப்புக்களை கற்றுக்கொள்வதிலும் கூட இவர்கள் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.

பாடசாலைக் கற்றல் பாடப்பரப்புக்களுக்கு மேலதிகமாக சமூகம் சார்ந்தும் அவர்களது சுயவிருப்பத்திற்கு ஏற்ற முறையில் புதிய துறைகள் சார்ந்து முயன்று கற்றுக்கொள்வதில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் காட்டும் அக்கறை

இசைத்துறையில் இசைக்கருவிகளை பயிலல், நடனம், வரலாற்றுத் தேடல், மேம்பட்ட பொருளாதாரம், இலக்கிய ஈடுபாடு, படைப்பாற்றலை வெளிப்படுத்தல், கற்றபடி சுயமாக வருமானமீட்டல், விளையாட்டு, தற்காப்புக்கலை என அவர்களது ஈடுபாடுகள் உள்ள சில துறைகளை அவதானத்தின் அடிப்படையில் எடுத்துக்காட்ட முடியும்.

மீத்திறனுடைய மாணவர்கள் நேர முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு நேர்த்தியுடையவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த வகைப்படுத்தலுக்கு ஏற்ப வடக்கின் பின்தங்கிய பாடசாலைகளில் அதிகளவான மீத்திறன் வெளிப்பாடுடைய மாணவர்களை இனம் காண முடிகின்றது.ஆயினும் அவர்களது ஆற்றல்களை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் காட்டும் அக்கறை போதியளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திறனுடைய மாணவர்கள் 

திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களைப் போன்று புரிதலையும் பொருத்தப்பாடான வெளிப்படுத்தலையும் செய்வதில் சற்றுக் குறைவான திறனை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர்.

இவர்களிடையே நினைவாற்றல் குறைந்தளவில் இருப்பதை இனம்காண முடிந்தது.இதனால் முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு இப்போது அறிந்து கொள்ளும் தகவல்களை ஒப்பிட்டுப் பகுப்பாய்வினைச் செய்து கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

சில திறனுடைய மாணவர்களுக்கு உடன் முன் நினைவூட்டல் இருக்கும் போது அவர்கள் தங்கள் ஒப்பீட்டாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துவதனையும் அத்தகைய முன் நினைவூட்டல் கிடைக்காத போது சிறப்பான ஒப்பீட்டைச் செய்து கொள்வதில் சிரமப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலைமை அவர்களிடையே நிலவும் போசாக்கு குறைபாட்டினால் ஏற்படுவதாகவும் அது சீர் செய்யப்பட்டால் இத்தகைய மாணவர்கள் மீத்திறன் வெளிப்பாட்டுக்கு தயாராக வாய்ப்பேற்படும் எனவும் துறைசார் வைத்திய ஆலோசனை மூலம் அறிய முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது.

திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களாக அல்லது அரைமீத்திறன் உடைய மாணவர்களாக மாற்றம் பெற்றுக்கொள்ளச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளிடையே உள்ள மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் திறனுடைய மாணவர்களாகவே ஆசிரியர்களாலும் கல்விச் சமூகத்தினாலும் இனம் காணப்பட்டு வரும் நிலையும் இருந்து வருகின்றது.இது கவலைக்குரிய விடயமாகும்.

மீத்திறனுடைய மாணவர்கள் உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய போதியளவு ஊட்டச்சத்து கிடைக்காமையினால் திறனுடைய மாணவர்களாக அல்லது அதற்கு கீழ் மட்ட திறன் நிலலைகளை வெளிப்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது கண்டு கொள்ளப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படும் திட்டமான முடிவுகளில் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே திறன் வெளிப்பாடுடைய மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோரை மீத்திறன் மாணவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்ற எண்ணக்கருவும் இந்த ஆய்வின் போதன அவதானிப்புக்கள் மற்றும் அவைசார்பாக எழுப்பப்படும் வினாக்களுக்காக துறைசார் நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆலோசனைகள் மூலமும் எழுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீழ்மட்ட நிலைகள் 

சாதாரண திறனுடைய மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போர் என்ற கீழ்மட்ட நிலைகளில் வகைப்படுத்தப்படும் மாணவர்கள் கற்றலில் புரிதலையும் அதன்பால் பொருத்தப்பாடான வெளிப்படுத்தல்களையும் மிகக் குறைந்தளவிலேயே வெளிப்படுத்துகின்றவர்களாக உள்ளனர்.

இவர்கள் மீது தாக்கம் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவையாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.பொருத்தமான முதல் நிலைக் காரணியை தெளிவாக அறிந்துகொள்ள மேலும் முனைப்பான ஆய்வுகள் தேவை.

கிடைத்த தகவல்களின் மூலம் போசாக்கின்மையும் ஒரு காரணி என அறிந்துகொள்ள முடிகின்றது.ஆயினும் இது மட்டுமே எல்லைப்படுத்தும் காரணியாக இருந்து விடும் என சொல்லிக்கொள்ள முடியாது.

சில கிராமங்களில் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் திறன் மாணவர்களாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் படிக்காதவர்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்கும் போது அவர்களது பிள்ளைகள் முனைப்பான திறன் வெளிப்பாடுகளை கொண்டுள்ளமையானது கீழ் மட்ட நிலைகளில் தரப்படுத்தும் மாணவர்கள் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவை என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்க முடியும்.

இவர்களிடையே மனநிலை மற்றும் வாழிடச் சூழலும் செல்வாக்குச் செலுத்தி நின்றன என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களது பாடசாலைச் சூழலும் பாரியளவிலான பங்களிப்பைச் செய்ய வேண்டியதாக இருப்பதும் அறியப்படுகிறது.

நகர்ப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் பொறுப்புக்கு மேலாக பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கள் அதிகமாக இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

எடுக்கப்பட்ட முயற்சிகள் 

பாடசாலைகளில் நடைபெறும் தேசிய பரீட்சைகளில் 100 வீத சித்தியை ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுக்கொள்வதற்காக பின்தங்கிய பாடசாலைகளிலும் அதிகமாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆயினும் அவை இலக்கை அடைந்தவையாக இல்லை என்பதும் இந்த ஆய்வின் போது அறிந்து கொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது சித்தியடைய முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர்களால் கருதப்படும் மாணவர்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றனர்.

அத்தகைய மாணவர்கள் அடுத்த வருடம் பரீட்சை எழுதப் பணிக்கப்படுகின்றனர்.
அல்லது தனிப்பட்ட பரீட்சார்த்தியாக எழுதும்படி வழிகாட்டப்படுகின்றனர் என்று ஆய்வுக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சூழலுக்கு முகம் கொடுத்த மாணவர்களது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலை தொடர்பில் கருத்திட்ட சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பல கிராமப்புற பாடசாலைகளில் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரீட்சை முடிவுகளில் 100 வீத சித்தியை காண்பிப்பதன் மூலம் சிறந்த கற்பித்தல் நடைபெற்றுவருவதாக காட்டபாபட்டு பாராட்டுக்களை பெற்றுக்கொளாவது கவலைக்குரிய விடயமாகும்.

இதனால் பல மாணவர்களது பாடசாலை இடைவிலகலுக்கு பாடசாலைகளின் மேற்படிச் செயற்பாடுகள் காரணமாவதும் நோக்கத் தக்கது.

மெல்லக் கற்போருக்கான மேலதிக வகுப்புக்களை முறைசார முறையில் முன்னெடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உள்ளன.எனினும் இவை உரிய தொடர்ச்சியைப் பேணி இலக்கை அடைந்ததாக அவதானிக்க முடியவில்லை.

மீத்திறன் மாணவர்களின் சவால் 

சில பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் மாணவர்கள் பாடசாலைகளிலும் மாலை நேர கல்வி நிலையங்களிலும் பாரிய சவாலை எதிர்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

எனினும் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய ஆசிரியர்கள் கவனமெடுக்காது நடந்து கொள்கின்றனர். A தரச் சித்தியைப் பெற வேண்டிய மாணவர்களை S தரச் சித்தியைப் பெற வைப்பதற்காக முயற்சிக்கப்படுவதாக தன் கருத்துக்களை எழுத்தாளரும் ஊடகவியலாளருமாக பணியாற்றிவரும் நதுநசி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் உடைய மாணவர்களோடு மெல்லக் கற்போர் மற்றும் சாதாரண திறனுடைய மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து கற்பிக்கும் போது மெல்லக்கற்போரும் புரிந்து கொண்ட பின்னரே அடுத்த பாடப்பரப்புக்குச் செல்லும் சூழல் இருப்பதால் மீத்திறன் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் இவ்வாறான வகுப்பறைகள் தொடர்பில் இவற்றொடு தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் இப்பாடசாலை அதிபர்களுடன் உரையாடிய போது அவர்கள் மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் அசௌகரியங்களை இனங்கண்டு கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.

மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் நிலைகளை சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் பொறுப்பான பதிலளிப்புக்களை அவர்களிடம் இருந்து பெற முடியவில்லை.

மாணவர்களின் உணர்வுகளை அவர்களது சூழல் சார்ந்து அவதானித்து அதன்பால் சரியான முறையில் அவர்கள் வழிகாட்டப்படாது போனால் வடக்கில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் மோசமாகும் வாய்ப்புக்களை அதிகம் எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.            

NO COMMENTS

Exit mobile version