விசேட பிரமுகர்கள் (VIPs) அடிக்கடி வந்து செல்லும் மற்றும் பாதுகாப்புப்
பராமரிப்பு மிகவும் முக்கியமான இடமான பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த
மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இருந்து, பொலிசார் திடீரெனவும்,
பொறுப்பின்றியும் தமது பாதுகாப்புப் பணியை விலக்கிக் கொண்டதாக அதன் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
இது குறித்து நாளிதழொன்றுக்கு பேட்டியளித்த பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த
மாநாட்டு மண்டப தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க, எந்தவொரு முன் அறிவிப்பு, முறையான தகவல் அல்லது மாற்று ஏற்பாடுகள்
இன்றி இந்தத் திடீர் வாபஸ் நடந்ததாகக் கூறினார்.
இதனால், பாதுகாப்புப் பணிகளை அவசரமாகக் கையாள நிர்வாகம் தமது சொந்த
ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடுமையான இடையூறுகள்
“BMICH-க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிசார் எங்களிடம் மாதத்திற்கு ரூ. 3.6
மில்லியன் கேட்டனர்.
சுமார் 30 ஆண்டுகளாக எந்தக் கட்டணமும் இல்லாமல் அவர்களுக்குத் தங்குமிட வசதி
மற்றும் பிற வசதிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணத்தைக்கூட நாங்களே செலுத்துகிறோம்.
இது குறித்து நாங்கள் பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் திடீரென
இரண்டு மணி நேரத்திற்குள் அனைத்து அதிகாரிகளையும், உபகரணங்களையும் திரும்ப பெற்றனர்,” என்று சந்திரிகா விளக்கினார்.
இந்த நடவடிக்கை கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்
கொண்டிருந்தபோது நடந்ததாகவும், இதனால் அரங்கில் கடுமையான இடையூறுகள்
ஏற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
