Home முக்கியச் செய்திகள் சர்ச்சைகளில் சிக்கிய பிரதி காவல்துறை மா அதிபர்: அதிரடியாக பதவி நீக்கம்!

சர்ச்சைகளில் சிக்கிய பிரதி காவல்துறை மா அதிபர்: அதிரடியாக பதவி நீக்கம்!

0

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்கவை இலங்கை காவல்துறையின் நிர்வாகப் பதவியில் இருந்து நீக்குவதற்கு காவல் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கமைய இவ்வாறு அவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, உத்தியோகபூர்வமாக பதவி நீக்கியதன் பின்னர் மத்திய மாகாணத்திற்கு மாத்திரமே சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்க பொறுப்பேற்கவுள்ளார்.

பதவிகளில் மாற்றங்கள்

இந்நிலையில், இலங்கை காவல்துறையின் நிர்வாகப் பதவிக்கு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய காவல் தலைமையகத்தில் உயர் பதவி வகிக்கும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்கவை இடமாற்றம் செய்து அவர் மீது ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடொன்றை வழங்கியிருந்தார்.

லலித் பத்திநாயக்க பிற மூத்த அதிகாரிகள் பற்றிய தவறான தகவல்கள் சமூக ஊடகங்களுக்கு வழங்கியதாகவும், மிகவும் இரகசியமான உள்ளக காவல்துறை கோப்புகளை வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளதாகவும் குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் மேலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version