Home இலங்கை சமூகம் எம்வி எக்ஸ்பிரஸ் கப்பல் மூழ்கியிருக்கும் பகுதியிலுள்ள நீர் மாதிரிகளில் மாற்றம்

எம்வி எக்ஸ்பிரஸ் கப்பல் மூழ்கியிருக்கும் பகுதியிலுள்ள நீர் மாதிரிகளில் மாற்றம்

0

Courtesy: Sivaa Mayuri

எம் வி எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl ) கப்பல் பேரழிவு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கடலில் இருந்து அண்மையில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளின் இரசாயன மற்றும் அளவுருக்கள் மாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பவத்தின் நேரடி விளைவாக இருக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயர் அதிகாரியை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் கடல் சுற்றுச்சூழல்

இந்த பாரிய சேதம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு  மே 20ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்த விபத்தின்போது, அபாயகரமான இரசாயனங்களை ஏற்றி வந்த எம்வி எக்ஸ்பிரஸ் கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது.

இதன் காரணமாக பல தசாப்தங்களுக்கு இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது குறித்த கப்பல் இலங்கையின் கடலில் மூழ்கிக்கிடக்கிறது.

எனினும் நாட்டின் கடல் சுற்றுச்சூழலுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய விபத்துக்கு காரணமான கப்பல் நிறுவனத்திற்கு எதிரான தனது வழக்கு நடவடிக்கையில் இலங்கை இன்னும் முன்னேற்றம் காணவில்லை.

நீரின் தரம்

இந்த பேரழிவின்போது இலங்கைக்கு 6.4 பில்லியன் டொலர்கள் நட்டமேற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விபத்து ஏற்பட்ட கடலின் சுமார் 14 இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் உள்ள நீரின் தரம் தென்மேற்கு மழையின் ஆரம்பத்துடன் மாற்றம் அடைந்துள்ளது.

எனினும், கடல் அமைதியாக இருக்கும்போது சேதமடைந்த கப்பலின் குப்பைகள் கடல் படுக்கையில் தங்கியிருக்கும் அதேவேளை பருவமழை ஆரம்பித்தவுடன் குப்பைகள், கடலில் கலப்பதே தண்ணீரின் இரசாயன மற்றும் இயற்பியல் அளவுருக்கள் மாறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இதனையடுத்து இந்த மாற்றம் பேரழிவு காரணமாக ஏற்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த, நீரின் தரத்தை தாம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version