Home இலங்கை சமூகம் ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை: செம்மணி தான் சாட்சி – தென்னிந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை: செம்மணி தான் சாட்சி – தென்னிந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

0

செம்மணி மனிதப் புதைகுழியானது (Chemmani mass graves) தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M K Stalin), செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய  நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார்.

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள் தான் கிடைக்கும். ஆனால்
ஈழதேசத்தில் மட்டும் தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன.

இப்போது
அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக் கூடுகளாய் மாறி
ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை தான் என்பதை அடையாளம் காட்டுகிறது என்றும் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி தான் சாட்சி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்படுகொலைக்கு செம்மணி தான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை
சாட்சிகளைப் பன்னாட்டு அவையில் முன்னிறுத்தினோம்.

ஆனால் நீதிக்கு இடம் தராத
ஐ.நா அவைகள் கள்ள மெளனம் காத்தது. இந்த செம்மணி அகழாய்வு உண்மையிலாவது,
இனப்படுகொலையின் இன்னல்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளட்டும்.

செம்மணி மனித புதைக்குழி 2009 ஆம் ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருக்கிலாம்.
அல்லது பின் நிகழ்ந்திருக்கலாம். எப்போது நடந்தாலும், சிங்களவரால்
நிகழ்த்தப்பட்டது.

இனப்படுகொலை தான் என்பதற்கு செம்மணியும் மற்ற அகழாய்வுகளும்
வெளிப்படுத்தியிருக்கிறது.

2009 க்கு பின்னும் கூடுதலாய் அதே புதைகுழி உத்தியை சிங்கள பேரினவாத அரசு
கையாண்டுள்ளது என்பதை இப்போது கூடுதலாய் வெளிப்பட்டிருக்கிறது.

தாயும், குழந்தையும் கட்டி அணைத்தபடி 

சமகாலத்தில்
செம்மணியை விட சர்வதேச சமூகத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்.

இதுவரை 80 க்கும் மேற்பட்ட அகழ்வாய்வு தொகுப்புகள் கிடைத்துள்ளன. எந்த
நாட்டிலும் இதுபோல், அகழாய்வில் அதிர்ச்சியில்லை. தமிழர் அகழாய்வில் முன்னோர்
வாழ்வியல் படித்துள்ளோம்.

ஆனால், தமிழீழ தேசத்தில்தான் எலும்புக் கூடுகளின்
வலியை உணரமுடிகிறது.

தாயும், குழந்தையும் கட்டி அணைத்தபடி மடிந்த எலும்புக் கூடுகளின் காட்சி,
காலம் கடந்தும் நம் காயங்களை.. மீண்டும் காயப்படுத்துகிறது..
பள்ளிச்சிறுவர்களின், புத்தகப் பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு.
கொடுமையின் உச்சத்தை தொடுகிறது.

எண்ணிலடங்கா எலும்புக் கூடுகளில் சிறுவர்
சிறுமியர் அதிகம் என்பதை உலகம் கண்டுணரா அதிர்ச்சி.

வதைக்கப்பட்டும், புதைக்கபட்டும், வல்லுறவில் மறைக்கப்பட்டும் எத்தனைப்
பெண்கள். அத்தனையும் செம்மணியில் எலும்புக்கூட்டின் சாட்சியங்கள்.

இன்னும்
இலங்கை அகழாய்வு நீண்டாலும் கள்ள மெளனம் சாதிக்கும் இவ்வுலகம்.

நாம் சிங்கள பெளத்த பேரினத்தின் அநீதிகளை பன்னாட்டு அவையில் எடுத்துரைப்போம்.

நீதிக்குக் குரல் கொடுப்போம்

மக்கள் திரள் போராட்டம் வழியாய் நமக்கான நீதிக்குக் குரல் கொடுப்போம்.

ஒன்றிய அரசு, அண்டை நாட்டில் நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா அவைவில் குரல் கொடுக்க
வேண்டும்!! இதற்கு முன் தமிழினத்திற்கு செய்ததை, செம்மணியை மனிதப் புதை குழி
அறிந்தும் கண்டும் காணமல் இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மணி மனிதப்
புதைகுழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை
பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும் மேலும் ஒன்றிய
அரசுக்கு அழுத்தும் கொடுக்கவேண்டும்.

செம்மணி நமது தமிழினப்படுகொலைக்கு சாட்சியத்திற்கு அடையாளம் ஆனாலும், இன்னும்
இது போன்ற தோண்டப்படாத அகழாய்வுகள் இன்னும் எத்தனையோ உள்ளது. காலம் ஈழத்
தமிழனத்திற்கு நல்ல தீர்ப்புகள் வழங்கும்.. நாம் தொடர்ந்து போராடுவோம் என
குறிப்பிடப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version