Home இலங்கை சமூகம் இலங்கைக்கு கறை படிந்த ஒரு இடமாக மாறியுள்ள செம்மணி..!

இலங்கைக்கு கறை படிந்த ஒரு இடமாக மாறியுள்ள செம்மணி..!

0

இலங்கைத் தீவானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற
பின்னர் இந்த நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மையின
சிங்கள ஆட்சியாளர்கள் கட்டவிழ்ந்து விட்ட வன்முறைகளும் அடக்கு முறைகளும் தமிழ்
மக்கள தாமும் இந்த நாட்டின் தேசிய இனம்.

எமக்கும் சமத்துவமான உரிமை உண்டு என
தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமிழ்
தேசிய இனத்தின் ஜனநாயக போராட்டங்களை இரும்பு கரங்களை கொண்டு தென்னிலங்கையில்
மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அடக்கி ஆட்சி செய்ததன் விளைவு இந்த
நாட்டில் இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்தி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை
ஏற்பட்டது.

வெள்ளை வான் கடத்தல்

இந்த நாட்டில் இடம்பெற்ற 30 வருட ஆயுதப் போராட்டமானது
மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் அதன் வடுக்களும், அதன் தாக்கமும்
இன்னும் இலங்கை தீவில் மாறவில்லை.

ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக இலங்கை இராணுவமும், பொலிசாரும், புலனாய்வுத்
துறையும் செயற்பட்ட போது ஆயுதமேந்திப் போராடியவர்களை மட்டுமன்றி சந்தேகத்தின்
பெயரிலும், சுற்றி வளைப்புக்களின் போதும், சோதனை நடவடிக்கைகளின் போதும் பலர்
கைது செய்யப்பட்டனர்.

பலர் வெள்ளை வானில் கடத்தப்பட்டனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட,
கைது செய்யப்பட்ட பலருக்கும் என்ன நடந்தது என தெரியாத நிலையில அவர்களது
உறவினர்கள் கண்ணீருடன் உள்ளனர்.

அத்துடன் இறுதி யுத்தத்தின் போது
அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவித்தலுக்கு அமைய பலர் இராணுவத்திடம்
ஒப்படைக்கப்பட்டனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் பலருக்கும் என்ன நடந்தது
என தெரியாத நிலையில், அவர்களது உறவினர்கள் கடந்த 16 வருடங்களாக நீதிக்காக
போராடி வருகின்றார்கள்.

இவ்வாறு போராடியவர்களில் பல தாய்மார் தமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே தமது உயிரையும் விட்டுள்ளனர்.

இன்னும் பலர் சாவை கையில் பிடித்துக் கொண்டு ஏக்கத்துடன் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு – கிழக்கு தமிழர் பிரதேசங்களில் புதிது புதிதாக பல
இடங்களில் மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்ப்பட்டு வருககின்றன.

இவை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகைளைத் தேடும் தாய்மார் மத்தியில் குழப்பத்தையும்,
அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டவர்கள் யார்?
அவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு பொறுப்பாளிகள் யார்? என்பதை வெளிப்படுத்தி
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின்
எதிர்பார்ப்பாகவுள்ளது.

கிருசாந்தி படுகொலை

யுத்தம் முடிந்த பின்பு மன்னார் சதோச, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், செம்மணிசித்துப்பாத்தி, சம்பூர் என பல இடங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள
போதும், செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அவற்றில் முதனிலை பெறுகிறது.

காரணம் மாணவி கிருசாந்தி பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இராணுவத்தால்
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமே செம்மணி.

அதன் நீட்சியாகவே தற்போதைய
மனித எலும்புக்கூடுகள் வெளி வருகின்றதா என்ற கேள்வி பாதிக்கப்பட்ட தமிழ்
மக்கள் மனங்களில் எழாமல் இல்லை.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழயில்
இருந்து குழந்தைகளினது எலும்புக் கூடுகள் உட்பட மீட்கப்பட்ட மனித எலும்புக்
கூடுகளின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. தொடந்தும் அகழ்வுப் பணி
நடைபெறுகின்றது.

இவ் எலும்புக் கூடுகளுடன் சிறுவர்களின் பாடசாலை புத்தகப் பை,
சிறுவர்கள் விளையாடும் பொம்மை, காற்சங்கிலி, சிறு வளையல், இரும்புக் கட்டிகள்,
போத்தல், பாதணிகள், சிறுமிகளின் ஆடைகள், பிளாஸ்டிக் மாலை, கற்கள் என பல
சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

அவை அங்கு நடந்தேறிய வன்கொடுமையை
வெளிப்படுத்தி நிற்கின்றன.

தற்போதைய அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கமும் முன்னர் ஒரு ஆயுத மேந்திய போராட்ட
குழுவாக ஜேவிபியாக செயற்பட்டே தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய
முகமூடியுடன் ஆட்சியில் உள்ளது.

அவர்கள் ஆயுதக் குழுவாக செயற்பட்ட போது
பட்டலந்த வதை முகாமில் ஜேவிபி செயற்பாட்டாளர்கள பலர் சித்திரவதை செய்யப்பட்டு
கொல்லப்பட்டனர்.

அதனை இந்த அரசாங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்
மறைக்கப்பட்டிருந்த பட்டலந்த அறிக்கையை வெளிக் கொண்டு வந்ததுடன் பட்டலந்த வதை
முகாம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள்
தண்டிக்கபடுவார்கள் எனக் கூறியிருந்தது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி

அதுபோல் வடக்கு – கிழக்கு பகுதிகளில்
செயற்பட்ட வதை முகாம்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலும் அரசாங்கம்
கரிசனை காட்ட வேண்டும். இதுவே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்க்கும் போது அங்கு பால்
குடிக்கும் குழந்தைகள் கூட கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
குழந்தை முகத்தில் இறைவனை காணாலாம் என்பார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட பால்
குடிக்கும் குழந்தைகளை கொல்லும் மனநிலையில் செயற்பட்டிருக்கிறார்கள் என்றால்
அவர்களது மனநிலை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் என்ற ஒரு
காரணத்திற்காகவே பச்சிளம் குழந்தைகள் கூட கொல்லப்பட்டுள்ளார்கள்.

செம்மணி,
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
பார்வையிட்டிந்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாட்டினால் கனடா,
பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் சித்துப்பாத்தி
மனித புகைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என்ற அழுத்தங்கள்
இராஜதந்திர ரீதியாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மட்டுமன்றி
புலம்பெயர் தேசங்களில் இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் செயற்பாட்டாளர்களால்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகம்
முன்பாக செம்மணி மனித புதைகுழி உள்ளிட்ட வடக்கு – கிழக்கில் உள்ள 100 இக்கும்
மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன் பிரித்தானிய
பிரதமரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில்
மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச வெளியிட்டுள்ள
கருத்துக்களும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர், யாழ்ப்பாணம் செம்மணி
மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு
தயாராக இருப்பதாக தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு
கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

அவரது இக் கருத்தானது அப் பகுதியில் பல
படுகொலைகள் இடம்பெற்றதனை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் 29 ஆம் திகதி முதல் செம்மணி
உள்ளிட்ட மனிதப் புதை குழிகளுக்கு சர்வதேச நீதி கோரி தமிழ் தேசியக் கட்சிகளின்
ஏற்பாட்டில் கையெழுத்துப போராட்டம் இடம்பெறுகிறது.

இதில் தமிழ் மக்கள்
நீதிக்காக தமது கையெழுத்துக்களை செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்
கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.

யுத்த காலத்தில் இந்த நாட்டில் திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நடந்தது
என்பதற்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

சிங்கள ஆட்சியாளர்களினதும், அவர்களின் கீழ் இருந்த ஆயுதப் படையினரதும்
மனநிலையை வெளிப்படுத்தி இலங்கைக்கு கறை படிந்த ஒரு இடமாக செம்மணி மனித
புதைகுழி மாறியிருக்கின்றது.

இதற்கான நீதி தான் என்ன..?

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு,
30 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version