யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ்
நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு
அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியினுடையது என்று சட்ட
மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கட்டளை
செம்மணி புதைகுழியில் இருந்து நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும்
பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் என்புத் தொகுதி எனச்
சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை 15ஆம் திகதிக்கு (நேற்று) முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட
மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா
கடந்த 10ஆம் திகதி கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அந்த என்புத் தொகுதி
தொடர்பான அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கை
நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம்
காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத் தொகுதி சிறுமியின் என்புத்
தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும் எனவும் சட்ட மருத்துவ
அதிகாரி மன்றில் தனது அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத்
தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப்பையோடு அடையாளம்
காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல்
சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் இருப்பதாகவும் மன்றுக்கு சட்ட மருத்துவ
அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.
புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது
போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத்
தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்றால்
அறிவுறுத்தப்பட்டது.
