புதிய இணைப்பு
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
“தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான
முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின்
பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை ,
காலணிகள் , கண்ணாடி வளையல்கள், ஆடையை ஒத்த துணிகள், பொம்மை உள்ளிட்ட
பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில்
வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் (10) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியாக 15 நாட்கள் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த நிலையில் சிறிது கால இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அந்த பணிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் 15ஆவது நாளான இன்றைய தினம், இறுதி நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மீட்கப்பட்ட பொருட்கள்
இந்தநிலையில், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று மாலை அறிவிக்கப்படும் எனப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணியான வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று (14) வரையில் 63 என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 54 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புக் கூட்டுத் தொகுதிகளில், சிறுவர்களின் என்புக் கூட்டுத் தொகுதிகளும் அடங்குகின்றன.
அத்துடன் இந்தப் புதைகுழியில் சிறுவர்களின் ஆடைகள், பாடசாலை பை மற்றும் விளையாட்டு பொம்மை போன்றனவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/v4vxy-kQHCYhttps://www.youtube.com/embed/uNV-BO6SPW0
