Home இலங்கை சமூகம் நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு சேவைகள் பணிப்பாளருக்கு சீ.ஐ.டி. அழைப்பாணை

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு சேவைகள் பணிப்பாளருக்கு சீ.ஐ.டி. அழைப்பாணை

0

நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார (Harshana Nanayakkara) பெயரின் முன் கலாநிதி அடைமொழி இடப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற அரசியலமைப்பு சேவைகள் பணிப்பாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக “கலாநிதி”என்ற அடைமொழி இணைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் (Asoka Ranwala) கலாநிதிப்பட்டம் தொடர்பான சர்ச்சை சூடுபிடித்திருந்த சந்தர்ப்பத்தில் ஹர்சன நாணயக்காரவின் கலாநிதிப் பட்டம் குறித்தும் சர்ச்சை கிளப்பப்பட்டது.

விசாரணைக்கு அழைப்பு

எனினும் தான் ஒருபோதும் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிடவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஹர்சன நாணயக்கார, நாடாளுமன்ற இணையத்தளம் ஊடாக தனக்கு அவமானம் நேர்ந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனடிப்படையில் இணையத்தள தரவேற்றத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற பணியாளர்கள் இரண்டு ​பேர் ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதன் பொறுப்பாளராக இருக்கும் நாடாளுமன்ற அரசியலமைப்பு சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேராவிடம் நாளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version