தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை (Coconut Cultivation Board) விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
குறித்த திட்டத்தின் முதற்கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி (Sunimal Jayakody) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து மாவட்டங்களிலும் தென்னை செய்கை வாரத்தை அறிவித்து, வெள்ளை ஈ தொல்லைக்கு அவசர நடவடிக்கையாக அதை செயற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
வெள்ளை ஈ பிரச்சினை
அதன்படி, இந்த திட்டத்தை ஜூலை 14 ஆம் திகதி நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்குவோம். வெள்ளை ஈ பிரச்சினைக்கு தீர்வாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கழுவப்படும்.
இது ஒரு பெரிய அளவிலான நடவடிக்கை, ஆனால் தற்போது அதற்குத் தேவையான மனிதவளத்தையும் இயந்திரங்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அண்மைக்காலமாக நாட்டில் ஒரு தேங்காயின் விலை 200க்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
