கொழும்பு (Colombo) கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் (Batticaloa) தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மட்டக்களப்பு தொடருந்து நிலைய பிரதான அதிபர் ஆ.பேரின்பராஜா (A.Barinbaraja) குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், இன்று (19) காலை மீண்டும் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பாதைகள்
மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்தில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு காட்டு யானைகள் பலியாகி இருந்த நிலையில், எரிபொருள் தாங்கிகள் தொடருந்து பாதையில் கவிழ்ந்து தொடருந்து பாதை கடுமையாக சேதமடைந்தது.
இந்தநிலையில், பொது மக்களின் நலன் கருதி தொடருந்து திணைக்களத்தினால் சேதமடைந்த பாதைகள் துரிதமாக புணரமைக்கப்பட்டதையடுத்து இன்று (19) தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
முட்பதிவு ஆசனங்கள்
இது தொடர்பாக தொடருந்து நிலைய அதிபர் பேரின்ப ராஜா மேலும் தெரிவிக்கையில், இரவு 8.15 இற்கு புறப்படவுள்ள பாடுமின் தொடருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறவுள்ளதுடன் முட்பதிவு ஆசனங்கள் செய்தவர்கள் வழமை போல் தங்களது பிரயாணத்தை மேற்கொள்ள முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், அதிகாலை 1.30 இற்கு புறப்படவுள்ள புலத்திசி கடுகதி சேவை மற்றும் இதர சேவைகளும் வழமை போல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை (18) இரவு பிரயாணம் செய்ய இருந்த பயணிகளுக்கான உட்பகுதிவு கொடுப்பனவுகள் மீளவும் திரும்ப கையளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.