Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு (Mullaitivu) – ஒட்டுசுட்டானில் உள்ள வீதியொன்றினை சேதப்படுத்தியதாக நீர் வடிகாலமைப்பினர் மீது பொதுமக்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
குழாய் நீர் விநியோகத்திற்காக குழாய்களை புதைக்கும் செயற்பாட்டிற்காக காபைற்று போடப்பட்ட வீதி வெட்டப்பட்டுள்ளது. எனினும், அது அதன் பின்னர் சரிவர சீர் செய்யப்படவில்லை.
அதனால், அந்த பாதை மீதாக பயணிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வெட்டப்பட்ட பாதை
ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதியில் இருந்து கிழக்கே பிரிந்து செல்லும் கொங்கிறீற்று வீதியில் ஆரம்பத்திலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
பிரதான வீதியின் அருகாக கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய்களை புதைப்பதற்காக இந்த கிளை வீதியின் குறுக்கே வெட்டப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட நிலையில் சரிவர சீர் செய்யப்படாது நீண்ட நாட்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளை வீதியின் குறிப்பிட்டளவு தூரம் காபைற்று போடப்பட்டுள்ளது.அதற்கப்பால் கொங்கிறீற் போடப்பட்டுள்ள வீதியாக இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சீராக்கப்படாத நிலை
பிரதான வீதியமைப்பின் போது நீர் வடிகலமைப்பினை திட்டமிடாத ஒரு சூழலில் கிளை வீதிகளின் குறுக்கே வெட்டி குடிநீர் குழாய்களை புதைக்கும் சூழல் வடக்கின் பல இடங்களில் நிகழ்ந்தவாறே இருக்கின்றது.
அது மட்டுமல்லாது, புதிய பாலங்களை அமைக்கும் பொருட்டும் காபைற்று இடப்பட்ட பிரதான வீதிகள் துண்டாடப்பட்டு பாலங்கள் அமைக்கப்படுவதையும் அவதானிக்கலாம்.
அவ்வாறான சூழல்களில் எல்லாம் வெட்டப்பட்ட வீதியின் பகுதி பயணத்திற்கு இடையூறில்லாதவாறு மீளவும் சீராக்கப்பட்டுள்ள போதும் ஒட்டுசுட்டானில் குறித்த பகுதியில் வெட்டப்பட்ட வீதி சரிவர சீராக்கப்படவில்லை.
வெட்டப்பட்ட வீதியின் பகுதியை நிரவி பாதையை செப்பனிட்டாலே அதன் மீதான பயணம் இலகுவாக அமையும். அத்தோடு, வாகனங்கள் சேதமடைவதும் தடுக்கப்படும்.ஆயினும் அது தொடர்பில் கவனமெடுக்காது இருக்கின்றனர் என அவ்வீதி தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலர் சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.