Home இலங்கை சமூகம் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – அநுர அரசிடம் சுரேஸ் கோரிக்கை

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – அநுர அரசிடம் சுரேஸ் கோரிக்கை

0

மாகாண சபை தேர்தலைகளை நடாத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு என்ற விடயம் கடந்த ஒரு வருடத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது தான் உண்மையான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு இன்று (01) வருவதாக செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு, மயிலிட்டி துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கான வேலைத்திட்டங்கள், வட்டுவாகல் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு போன்ற விடயங்களை செய்ய இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

அபிவிருத்தி பணிகள் ஒருப்பக்கத்தில் வரவேற்கக்கூடிய வகையில் இருந்தாலும் கூட அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியமான விடயம் ஒன்று சொல்லப்பட்டு இருந்தது.

மாகாண சபை தேர்தலைகளை நடத்துவது தொடர்பாக சொல்லப்பட்டு இருந்தாலும் இன்று வரை அதை நடாத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை.

செம்மணி புதைகுழி விடயம் என்பது ஒரு இனப்படுகொலையின் அழிக்க முடியாத சாட்சியமாக இருக்கிறது. எந்தவொரு அரசாங்கமும் தனது இராணுவத்தினரை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர்.

ஆகவே இவர்கள் ஊடாக உள்நாட்டில் நீதிப் பொறிமுறையை ஒன்றை உருவாக்கி நிச்சயமாக நீதியை பெறமுடியாது.

ஆகையால் தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் திரண்டு கையெழுத்து போராட்டம் ஒன்றை நடத்தி சர்வதேச நீதிப் பொறிமுறையை விரும்புகின்றார்கள்.

ஆகவே ஜனாதிபதி சர்வதேச நீதிப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி யாழ். வருகையின் போது முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் பல்வேறுபட்ட காணிகள் இன்றும் முப்படைகள் வசம் இருக்கிறது.

காணி விடுவிப்பு என்ற விடயம் கடந்த ஒரு வருடத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது தான் உண்மையான விடயம். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சகல அமைச்சர்களும் காணிகள் விடுவிக்கப்படும் என கூறுகிறார்கள் தவிர காணிகள் விடுவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அல்ல முல்லைத்தீவிலும் இதே பிரச்சனை இருக்கிறது. தங்கள் பதவிக்கு வந்தால் உடனடியாக இவற்றை செய்வோம் என உறுதிமொழி கூறி இருக்கிறார்கள்.

ஆகவே காணி விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் காத்திரமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version