வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை
செய்து கொண்டிருந்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்தமையால்
குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை அந்த காணியை
பராமரிப்பவர்களால் இன்று (14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அந்த பகுதிக்கு சென்ற வனவளத்திணைக்கள அதிகாரிகள் இது
வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காணி என தெரிவித்து அந்த பணிகளை தடுத்து
நிறுத்தியதுடன் அதில் ஈடுபட்ட ஒருவரை தமது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
காணியின் உரிமையாளர்
இதன்போது குறித்த காணியின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நபர் இந்த
நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டவரை
விடுவிக்குமாறும் தெரிவித்த நிலையில் அந்தப்பகுதியில் குழப்பநிலை
ஏற்பட்டது.
இதன்போது வனவளத்திணைக்கள அதிகாரி தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக
பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், குற்றவாளியை
தப்பிக்க ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்து வனவளத்திணைக்கள அதிகாரிகளால்
ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்களின் பூர்விக காணிகளில்
வனவளத்தினைக்களம் எல்லைகற்களை போட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
