நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையானது, தனிப்பட்ட காரணங்களுக்காக
ஊழியர்களை துன்புறுத்தியதாகவும், ஒரு ஊழியருக்கு எதிராக தாக்கல்
செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு பெருந்தொகையான
கட்டணத்தை செலவழித்ததாகவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குற்றம்
சாட்டியுள்ளது.
நீதிமன்ற வழக்கிற்கான செலவு
அந்த குழுவின் கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, குறித்த
நீதிமன்ற வழக்கிற்காக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையானது 15
மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு வழக்கு விசாரணைக் கட்டணத்திற்காகவும் சட்டத்தரணிக்கு
600,000 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஊழியர் மீண்டும் சேவையில்
இணைக்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நிர்மாண
கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மேன்முறையீடு செய்துள்ளது.
கூரை புனரமைப்பு
மேலும், அந்த அதிகார சபை அமைந்துள்ள கட்டடத்தின் கூரையைப் புனரமைப்பதற்காக 5.9
மில்லியன் ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில்
தெரியவந்தது.
இந்த பணிக்கான விலைமனுக் கோரலை (Quotation) நிறுவனத்திற்கு உள்ளேயுள்ள ஒரு
ஒப்பந்தக்காரரிடம் இருந்து பெறுவதற்கு அதிகாரசபை தவறியுள்ளதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
