Home இலங்கை சமூகம் வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ந்து பாதிப்படைந்துள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை

வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ந்து பாதிப்படைந்துள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை

0

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்துவிதமான உதவிகளையும்
மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக
சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் உயர்மட்டம்
கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு
விஜயம் மேற்கொண்டு அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களது
இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி,சமூக
பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே,
வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, பாரளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பிர்தோஸ் நழீமி உள்ளிட்டோர் கலந்து
கொண்டிருந்தனர், 

செய்தி – குமார்

வவுனியா

வவுனியா, பட்டாணிச்சூர் கிராமத்தில் வெள்ள நிலமைகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் காதர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களது பிரச்சினைகள் தொடர்பாகவும்
கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.

இதன்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி – திலீபன்

காந்திபூங்கா, மற்றும் கந்தையா சிறுவர் பூங்கா

மட்டக்களப்பு வீசிய பலத்த காற்றினால் நகரிலுள்ள காந்திபூங்கா, மற்றும் கந்தையா
சிறுவர் பூங்காவில் உள்ள மரங்கள் அடியேடு சரிந்து வீதியில் வீழ்ந்ததையடுத்து தீயணைப்பு படையினர் அவற்றை
வெட்டி அகற்றியுள்ளனர்.

பலத்த காற்றினால் நகரிலுள்ள காந்திபூங்கா, மற்றும் கந்தையா
சிறுவர் பூங்காவில் உள்ள மரங்கள் அடியேடு சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி – பவன்

யாழ். நவாலி 

 நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு
அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த
காற்றினால் குடை சாய்ந்துள்ளது.

இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும்
சேதமடைந்திருந்தது.

இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாத நிலையில், குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – கஜி

வல்வெட்டித்துறை

வீசிய கடும் புயல் காரணமாக வல்வெட்டித்துறையில் பல இலட்சம் பெறுமதியான படகுகள்
சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரம் நேரடியாக சம்பவ இடத்திற்கு
சென்று நிலமைகளை பார்வையிட்டார்.

செய்தி  – எரிமலை

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(27) இரவு பெய்த கடும் மழை காற்றினால் பல
வீதிகளின் குறுக்கே பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் போக்குவரத்தும்
தடைப்பட்டிருந்தது.

முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் இரண்டு இடங்களில் முறிந்து வீழ்ந்த
பாரியமரத்தினால் போக்குவரத்து இவ்வாறு  தடைப்பட்டுள்ளது.

நெடுங்கேணி 17ஆம்
கட்டைப்பகுதியில் விழுந்த மரம் உடன் அகற்றப்பட்டுள்ளதுடன் கோடாலிக்கல்லு
குளத்திற்கு அருகில் விழுந்த பாரிய மரம் நேற்று (28) நண்பகலுடன்
அகற்றப்பட்டமை கறிப்பிடத்தக்கது.

செய்தி – கீதன்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க
நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும், சுற்று நிருபங்களின் படி அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்க தற்போது நிதி
மூலங்கள் எதுவுமில்லை எனத் தெரிவித்த மன்னார் மாவட்ட செயலர், ஆளுநர் மற்றும்,
கூட்டுறவு பிரதியமைச்சர் ஆகியோரிடம் 38 மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை
தம்மால் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி கிடைத்தால் மக்கள் அனைவரும்
ஒருவாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

செய்தி – ஆஸிக்

NO COMMENTS

Exit mobile version