ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் விசேட மருத்துவர் மகேஷி விஜேரத்னவின் மகள்
ஹேமாலி விஜேரத்ன கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான்
நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் ஹேமாலி விஜேரத்ன தற்போது பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(8) குறித்த வழக்கு விசாரணையின் போது, கல்வி காரணங்களுக்காக எதிர்வரும் 13
ஆம் திகதி அவர் வெளிநாடு செல்ல உள்ளதாக கூறி, அவரது சட்ட ஆலோசகர் நீதிமன்றம்
அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.
வாக்குமூலம் பதிவு
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும்
அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை ஆட்சேபிக்கவில்லை.
இருப்பினும், அவர் நாடு திரும்பிய பிறகு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு
செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இதன்படி, சந்தேக நபர் நாடு திரும்பியதும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி
வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார்.
அதற்கமை சந்தேக நபர் வெளிநாடு செல்லவும் அனுமதித்த நீதிவான் வழக்கை டிசம்பர் 9
ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கைது நடவடிக்கை
மருத்துவ மோசடி தொடர்பாக தனது தாயார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்ட பின்னர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்
விடுத்ததாக கூறப்படும் 21 வயதான ஹேமாலி விஜேரத்ன கடந்த ஜூலை 07 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசேட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த ஒரு
தனியார் நிறுவனம் மூலம் ரூ. 50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை
நோயாளிகளுக்கு ரூ. 175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
