Home அமெரிக்கா கென்னடி கலை மையத்தில் இருந்து ட்ரம்பின் பெயரை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கென்னடி கலை மையத்தில் இருந்து ட்ரம்பின் பெயரை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற ஜான் எஃப். கென்னடி கலை
மையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்
பெயரை 14 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அந்நாட்டு ஃபெடரல் நீதிமன்ற
நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 1964ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, இந்த மையத்திற்கு
நாடாளுமன்றத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும், ஜனாதிபதி
ட்ரம்ப் தலைமையிலான சபைக்கு இந்த அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தனது 94 பக்க
தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்குச் சொந்தமான

மேலும், இந்த கலை மையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூட ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம்
திட்டமிட்டிருந்ததற்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், சபை
உறுப்பினர்களின் வாக்குரிமையைப் பறித்த ட்ரம்பின் கொள்கையும் இரத்து
செய்யப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர் ஒரு சார்புடையவர் என்றும், இந்த கலை மையத்தின்
நிர்வாகத்தை மீண்டும் நாடாளுமன்றத்திடமே ஒப்படைக்கப் போவதாகவும் ஜனாதிபதி
ட்ரம்ப் தனது ‘டிரூத் சோசியல்’ பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அதேவேளையில், இந்த வழக்கைத் தொடர்ந்த கலை மையத்தின் அறங்காவலரான பிரதிநிதி
ஜாய்ஸ் பீட்டி, இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

கென்னடி கலை மையம் என்பது அமெரிக்க மக்களுக்குச் சொந்தமான ஒரு புனிதமான தலம்
என்றும், ஜனாதிபதி ட்ரம்பின் தனிப்பட்ட விளம்பரத்திற்காக இது சிதைக்கப்படுவதை
எதிர்த்து சட்டத்தின் துணை கொண்டு வென்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/court-orders-removal-trump-s-name-kennedy-center-1780172344

NO COMMENTS

Exit mobile version