Home இலங்கை சமூகம் வெளிநாட்டு பணத்தில் அபிவிருத்தி செய்த வீதியின் நிலை

வெளிநாட்டு பணத்தில் அபிவிருத்தி செய்த வீதியின் நிலை

0

வடக்கில் உள்ள முதன்மை வீதிகள் பல வெளிநாடுகளிடம் கடன்பெற்று செய்யப்பட்ட
அபிவிருத்தி பணியாக காணப்படுகின்றன.

இன்றும் இந்த கடனுக்கான வட்டிகளை இலங்கை
அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டியதாக காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின்
துணுக்காய் – வெள்ளாங்குளம் வீதியானது டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றி செல்லுவதால்
மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு செல்லும்
வீதியாக இந்த வீதி காணப்படுகின்றது.

கனரக வாகன பயன்பாடு

இந்த வீதியில் வெள்ளாங்குளம் சந்தியில் இருந்து மாங்குளம் நோக்கி செல்லும்
பகுதியில் கணேசபுரம் வரையான சுமார் 8 கிலோமீற்றர் தூரத்திற்கு கனரக வாகனங்கள்
(டிப்பர்) பயன்படுத்தப்பட்டு குறித்த பகுதியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு
மணல், கிரவல்கள் ஏற்றபட்டு வருகின்றன. இவ்வாறு கனரக வாகன பயன்பாட்டினால் இந்த
வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.

இது வீதியின் அபிவிருத்தியில் ஏற்பட்ட பிழையா அல்லது கனரக வாகனங்களின்
பயன்பாட்டில் ஏற்பட்ட சேதமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வடக்கில், குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அதிகளான இயற்கை
வளங்களான மணல், கிரவல், மரங்கள் போன்றவை யாழப்பாணத்திற்கு ஏற்றப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் வெள்ளாங்குளம் – துணுக்காய் வீதியில்
ஒரு பகுதியில் கனியவளத் திணைக்களத்தினரால் மணல் அகழ்விற்கான அனுமதி
வழங்கப்பட்டு நாள் ஒன்றிற்கு அதிகளவான டிப்பர்களில் இவை ஏற்றிச்செல்லப்படுகின்றன.

இவ்வாறு இந்த டிப்பர்கள் பயணிக்கும் இந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார
சபையின் கீழ் காணப்படுகின்றது. மன்னார்-வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்த போக்கு
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் B269 வீதியானது மாங்குளம்
பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கல்விளான்
வரையும் சரியாக காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில்
காணப்டும் வீதியில் டிப்பர் வாகனங்களை பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியால் செல்லும் டிப்பர்களால் வீதி முற்றாக சிதைவடைந்த நிலையில்
வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இயற்கை வளங்கள்

இலங்கை அரசாங்கம் இன்றும் வெளிநாட்டு கடனினை திருப்பி செலுத்த வேண்டிய நிலை
காணப்பட்டாலும் அபிவிருத்தி பணிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் இவ்வாறான
நடவடிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

கனரக வாகனங்களால் வீதி சேதமடையும் அதேவேளை, மறுபக்கத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

  

மணல்
அகழ்விற்கு அனுமதி கொடுக்கும் திணைக்களங்கள், வாகனங்களின் வீதி
போக்குவரத்திற்கான வழித்தடத்தினை அறிந்து அந்த வீதிகளின் நிலையினை உணர்ந்து
அதனால் என்ன நன்மை, தீமைகள் உள்ளன என்பதை அறிந்து அதற்கான அனுமதிகளை கொடுக்கவேண்டும்.

இவ்வாறு வடக்கில் யாழ்ப்பாணத்தினை தலைமையாக கொண்டு செயற்படும் சில திணைக்கள
அதிகாரிகள் வன்னியில் இயங்கை வளங்களை சுறண்டுவதற்கான அனுமதியினை
வழங்கிவருகின்றார்கள். இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிராம மக்களுக்கு
என்ன நன்மை, தீமை என்பவற்றினையும் ஆராய்ந்து பார்த்து அனுமதி வழங்கவேண்டும்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு மணல்
அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்விற்கும் மணல் அகழ்விற்குமான அனுமதிகள்
மற்றும் கருங்கல் அகழ்விற்குமான அனுமதிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன.

சமூக அக்கறையாளர்களின் கருத்து

இதனால் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய கிடங்குகள் தோண்டப்பட்டு இயற்கை
வளச் சமநிலை அழிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

உதாரணமாக கொக்காவில் கிரவல் அகழ்வு, களிக்காடு கிரவல் அகழ்வு, ஒட்டுசுட்டான்
கருங்கல் அகழ்வு ஆகியவை அந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கும் கிராமத்திற்கும்
எந்த நன்மையும் பயக்கவில்லை. மாறாக வளங்கள் அழிக்கப்பட்ட நிலையினையே இன்று
உணரமுடிகின்றது.

போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அபிவிருத்திக்காக கிரவல்
அகழ்விற்கும் மணல் அகழ்விற்கும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் அனுமதி
வழங்கியதால் பல ஏக்கர் பரப்பு கொண்ட இடங்கள் குழிதோண்டி சுரங்கங்கள்
ஆக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் மாற்றப்பட வேண்டும். மக்களின் இலகுவான
போக்குவரத்து வசதியான வீதிகள் பல கோடி பெறுமதியில் புனரமைப்பு செய்யப்பட்டு
கொடுக்கப்பட்டாலும் அதனை பல இலட்சம் ரூபா பணம் செலவு செய்து அந்தந்த
திணைக்களங்கள் பராமரித்து வருகின்றன.

ஆனால், பொறுப்பற்ற சில திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டினால் இவ்வாறான
அபிவிருத்தி செய்யப்பட்ட பணிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில், வழங்கப்பட்ட
அனுமதிகளை பகுப்பாய்வு செய்து வழங்கவேண்டும் என்பது சமூக அக்கறையாளர்களின்
கருத்தாக அமைகின்றது. 

NO COMMENTS

Exit mobile version