டித்வா சூறாவளியுடன் தொடர்புடைய கடுமையான வானிலை தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்ற
கூற்றுக்களை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக அமைச்சரவைப்
பேச்சாளரும்,வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ ஊடக நிறுவனங்களை
எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
குறித்த பிரச்சினையை ஆராய நாடாளுமன்ற தேர்வுக்குழுவை அமைக்க
வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அவர் நிராகரித்துள்ளார்.
தேவைப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல சுதந்திரம் உள்ளது என்று
குறிப்பிட்ட அமைச்சர், சில ஊடக நிறுவனங்கள் இந்த காணொளிகளை எவ்வாறு
திருத்தியமைத்தன என்பதை காட்டமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 12 ஆம் திகதியன்றே அரசாங்கம் சூறாவளி பற்றிய தகவல்களைப் பெற்றதாக சில
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். அவை தவறானவை
மற்றும் பொறுப்பற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரையை அடிப்படையாகக்
கொண்ட அறிக்கைகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன்
சேர்ந்து, விளக்கம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
