தெஹிவளை விளையாட்டு மைதானத்திற்கு அருகில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில்
ஈடுபடும் குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் நெருங்கிய ஆதரவாளர் சுட்டுப்
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த பிரதான
துப்பாக்கிதாரி மேல் மாகாண (தெற்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனரதன வீதிப் பகுதியில் உள்ள ‘ஏ’ குவாட்டர்ஸ்
விளையாட்டு மைதானத்துக்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இரவு 8 மணியளவில்
மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த இரு சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை
பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் 34 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட
குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பட்டொவிட்ட அசங்கவின் நெருங்கிய
ஆதரவாளர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு
இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த மேல்மாகாண (தெற்கு) குற்றப்
புலனாய்வு அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியைக்
கைது செய்துள்ளனர்.
மேல்மாகாண (தெற்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த
உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய, பொரலஸ்கமுவ பகுதியில் விசேட சுற்றிவளைப்பு
நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து கடந்த புதன்கிழமை மேற்படி சந்தேகநபரைக் கைது
செய்திருந்தனர்.
கைதான நபர் 52 வயதுடைய களுபோவில பகுதியைச் சேர்ந்தவராவார்.
வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள
கைது நடவடிக்கையைத்
தொடர்ந்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது,
குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், 4 வெற்றுத்
தோட்டாக்கள் ஆகியன பெல்லன்வில பகுதியில் மரத்தடியில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
குற்றச்செயலுக்காகச் சந்தேகநபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘போர் 16’ ரகத்
துப்பாக்கியையும், மற்றைய நபர் ரிவோல்வர் ரகத் துப்பாக்கியையும்
பயன்படுத்தியுள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில்
ஈடுபடும் குற்றவாளி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் இந்தத் துப்பாக்கிச் சூட்டை
நடத்தியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்று பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேல்மாகாண (தெற்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
