பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்
தடுப்புச் சட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இறுதி செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நீதி
அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் கடந்த செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும்
என்று முன்னதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்த நிலையிலேயே நீதி அமைச்சர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இது தொடர்பாக ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதைத்
தக்கவைக்கும் எண்ணம் இல்லை.
ஆனால், சட்டம் ஒன்றை இரத்துச் செய்யும்போது அதை
விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய
சட்ட வரைவைத் தயாரிக்கும் குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.
புதிய சட்டம்
அன்று சட்ட
வரைவு இறுதிப்படுத்தப்பட்டுக் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.
அதன்பின்னர் பொதுமக்கள் கருத்துக்களைப் பெறுவதற்காக சமூகத்தில் ஒரு
மாதத்துக்கு அந்தச் சட்ட வரைவு விடப்படும்.
எதிர்வரும் 28ஆம் திகதி குழு அறிக்கையை வழங்கினால் சட்ட வரைவு தயார் என்ற
அறிப்பை எம்மால் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்
வெளியிடமுடியும்.
நாட்டின் பாதுகாப்புக் கருதி புதிய சட்டம் வரும் வரையில்
இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்த நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
