நாடு முழுவதும் டெங்கு அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வைரஸ் திரிபில் ஏற்பட்டுள்ள மாற்றமே என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சூழ்நிலைகள் பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஏற்படுவதாகவும், இது ஒரு இயற்கையான போக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நாடு தழுவிய ரீதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு டெங்கு பரவல் கணிசமாக அதிகரித்துள்ள பின்னணியில் பிரதி அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
விசேட நடவடிக்கை
தற்போதைய சூழ்நிலையைக் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேண வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்துகிறார்.
சாதாரண வடிகால் அமைப்புகள் அல்லது கால்வாய்களில் மட்டுமன்றி வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சேகரிக்கப்படும் சுத்தமான நீரில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வது தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஸ்ரீ ஜெயவர்தனபுரவின் கோட்டை பகுதியில் அண்மை நாட்களில் ஒரு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட அதிக அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 3,500 வீடுகள் அதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவ்வாறான தொடர்ச்சியான திட்டத்தின் காரணமாக, கோட்டைப் பகுதியில் டெங்கு பரவல் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/dengue-spread-warning-issued-1783244160
