அபே ஜனபல கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியை வலுக்கட்டாயமாகப் பெறுவதற்காக அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் அவரைக் கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அபே ஜனபல கட்சிக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் அத்துரலிய விமலதிஸ்ஸ தேரரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் அத்துரலிய ரத்தன தேரர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார்.
விளக்கமறியல் உத்தரவு
இருப்பினும், நீதிமன்றத்தை புறக்கணித்த காரணத்தினால் ஓகஸ்ட் 18 ஆம் திகதி கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும், தலைமறைவான ரத்தன தேரர் 29 ஆம் திகதி கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார், பின்னர் அவர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விரிவான விசாரணை
இந்த நிலையில், தன்னை கடத்திய குழு, அதுரலியே ரத்தன தேரர் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகவும், பல வெற்றுத் தாள்களில் அவர்களின் கையொப்பங்களைப் பெற்றதாகவும் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
அதன்படி, குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் அதுரலியே ரத்தன தேரருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
