Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல்

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல்

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் புலம்பெயர் தமிழர் ஒருவர் பிரதேச வாசிகளால் அச்சமூட்டப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அச்சமூட்டப்பட்ட அவர் தொடர்ந்து அவரது நட்பு வட்டாரத்தினரால் அச்சமூட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்த இவர் தன் முதுமைக் காலத்தில் தாயகம் திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக அவருடன் உரையாடிய போது குறிப்பிட்டிருந்தார்.

சிலை வைக்கும் முயற்சி 

தன் விவசாய நிலத்தில் கமுகு, வாழை, மற்றும் பயன்தரு பழமரங்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்களோடு அழகூட்டும் தாவரங்களையும் நாட்டி பராமரித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

அவ்விவசாய நிலத்தில் சிங்கமொன்றின் சிலையை நிறுவிக்கொள்ள விருப்பப்பட்டு அதற்கு முயற்சித்துள்ளார்.

தாயகத்தில் உள்ள தனது நட்பு வட்டத்துடன் இது தொடர்பில் கலந்தாலோசித்த போது சிங்கத்தின் சிலையை வைத்தால் தீவிர தமிழரசியல் ஆர்வலர்களால் சேதமாக்க வாய்ப்புள்ளது. அதனால் அதனை வைக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால், புலியொன்றின் சிலையை வைக்கலாம் என்ற அவரது அடுத்த தெரிவை முன்வைத்த போது அரச தீவிர ஆதரவாளர்கள் அதனை சேதமாக்க வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலை வைப்பது தொடர்பில் தன் விருப்பத்திற்கேற்ப முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியாத சூழலினை தாயகத்தில் அவர் எதிர்கொண்டதனை அவருடனான உரையாடல் வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

வைக்கப்பட்ட சிலை

இறுதியில் எதுவும் வேண்டாம் என்ற முடிவிற்கு தள்ளப்பட்ட அவர் சிலை வைக்கும் முயற்சி தொடர்பில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்திருந்தார்.

யாராலும் தொல்லை தரமுடியாதபடி யானையொன்றின் சிலையை வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து யானையொன்றின் சிலையை விவசாய நிலத்தில் உள்ள மரமொன்னின் கீழ் வைத்துள்ளார்.

தமிழர் பாரம்பரியமும் சிலை வைப்பும்

தமிழர்களின் பாரம்பரியமான வாழ்வியல் அணுகுமுறைகளில் சிலை வைக்கும் இயல்பு தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. இன்றும் இது தொடர்கின்றது. வரவேற்பு வாசலில் இரு பக்கங்களிலும் சிலைகளை வைக்கும் பழக்கம் இருந்து வந்திருப்பதையும் அவதானிக்கலாம்.

இன்றும் ஈழத்தில் பல இடங்களில் தங்கள் வளவுகளில் பிரதான வாசல்களில் படுத்திருக்கும் நந்தியின் (எருத்து மாடு) சிலையை வைத்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் வீடுகளுக்கு முன்னே கடற்கன்னியின் சிலை வைத்திருப்பதை அவதானிக்கலாம். உடலின் மேலரைப்பகுதி கன்னிப்பெண்ணின் உருவமும் கீழரைப்பகுதி மீனின் உருவமுமாக இருக்கும் தோற்றமே கடற்கன்னியாக உருவகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தின் பல இடங்களிலும் வீடுகளுக்கு முன்னே தங்களின் இறந்த மூத்தோரின் சிற்பங்களை நிறுவிக்கொண்டிருப்பதையும் இன்னும் சில இடங்களில் உயிரோடு இருக்கும் தங்கள் பெற்றோரின் சிற்பங்களை நிறுவி இருப்பதையும் அவதானிக்கலாம்.

எல்லா பாடசாலைகளிலும் சரஸ்வதியின் சிற்பம் இருப்பதையும் இங்கே இட்டுச் சொல்ல முடியும். தமிழர்களின் ஆலயங்களில் சிற்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதையும் இங்கே எடுத்துக் காட்டலாம்.

யானைக்கு வந்த ஆபத்து 

இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுள்ள இன்றைய சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக உள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.

சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட போதும் ஐ.தே.க வின் தலைவர் என்பதால் அவரை பொதுமக்கள் அவரது கட்சியின் சின்னமான யானையால் குறிப்பிட்டு விழிப்பதும் வழக்கமாக இருக்கின்றது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோற்க நேரிட்டால் யானைச் சிலையை அவரது ஆதரவாளர்கள் சேதமாக்கிவிடுவார்கள் என எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களாக பணியாற்றிவரும் சிலரே இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது

இவை அவர்களின் நட்பு வட்டத்தினுள்ளே பரிமாறிக்கொண்ட கருத்துக்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் அவை சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன என சமூகவியல் கற்றலாளர்கள் சிலருடன் இந்நிகழ்வு தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிந்திக்கப்பட வேண்டியவை 

விளையாட்டகப் பேசிவிட்டுப் போகும் பல வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை கடந்து விட்டு போக முடியாத சந்தர்ப்பங்களும் இருப்பதை நோக்க வேண்டும்.

இதுவும் அதுபோல் ஒன்றாக இருக்கலாம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுபடுத்தக் கூடிய சொற்கள் மற்றும் பொருட்களை கையாள முடியாத சூழல் இலங்கையில் இருந்து வருகின்றது.

அது போலவே சிறந்த படைப்புக்களாக உள்ள விடுதலைப்புலிகளின் மொழிசார்ந்த மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் சார்ந்த விடயங்களை ஈழத்தில் தமிழர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியாதளவுக்கு அச்சமூட்டப்பட்டிருக்கும் சூழல் இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.

மாவீரன் கர்ணன்

உதாரணமாக முச்சக்கர வண்டிக்குப் பின்னே எழுதப்பட்ட வாசகம் ஒன்று தொடர்பில் முல்லைத்தீவில் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அதனை அகற்றுமாறு பணிக்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றையும் இங்கு விபரித்தல் பொருத்தமாகும்.

தென்னிந்திய திரைப்படமான கர்ணனில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் வரும் ஒரு பாடலாக “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. படத்தின் கதாநாயகனாக கர்ணன் என்ற பாத்திரம் இடம்பெற்றிருந்தது. இதனையொட்டியே அவ் முச்சக்கர வண்டியின் பின் பகுதியில் மாவீரன் கர்ணன் என்ற சொற்றொடர் இடம் பெற்றிருந்தது.

பொலிஸாரால் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாலேயே முச்சக்கர வண்டி சாரதி எச்சரிக்கப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் போரில் இறக்கும் போது அவர்களை மாவீரர் அல்லது மாவீரன் என விழிப்பதை கருதியே இது அதுவாக இருக்கலாம் என உருவகிக்கப்பட்டிருந்தது
என சமூகவியல் கற்றலாளர்கள் இது தொடர்பில் விளக்கியிருந்தனர்.

ஈழத்தமிழர்களை அச்சுறுத்தல்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டே தான் இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை.

NO COMMENTS

Exit mobile version