இலங்கையின் வடக்கு, கிழக்கில் சீனாவும், பாகிஸ்தானும் ஆழக்கால் ஊன்றுவது
தொடர்பில் சில ஆதாரங்களுடனான விபரங்களை இலங்கை தமிழரசுக்கட்சியினர்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர் என அறியவந்துள்ளது.
இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம்
ஜெய்சங்கரை இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்கள் நேற்றுமுன்தினம் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தப் பேச்சின் இறுதியில் இலங்கையை மையமாக வைத்து இடம்பெறும் பூகோள அரசியல்
போட்டி, அதனால் இலங்கை மட்டுமன்றி இந்தியா எதிர்கொள்ளக் கூடிய ஆபத்து ஆகியவை
தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இந்தியா பாதிக்கும் அந்திய சக்திகள்
இந்தியாவைப் பாதிக்கும் வகையில் அந்திய சக்திகள் இலங்கையின் வடக்கு, கிழக்கு
மாகாணத்தைப் பயன்படுத்தத் தமிழர் தரப்பு அனுமதிக்காது என்று உறுதியளித்த
தமிழரசுக் கட்சி, இந்தியாவுக்கு அண்மையில் உள்ள வடக்கு மாகாணத்தில் சீனா
மற்றும் பாகிஸ்தான் தரப்புக்கள் போட்டி போட்டு இடம் பிடிப்பது தொடர்பில்
சான்று மூலம் ஆதாரப்படுத்தும் சில ஆவணங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம்
கையளித்தது என தெரியவந்தது.
இவற்றினைப் பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மிகவும் மிகவும்
ஆர்வமாக அவற்றைக் கண்ணுற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் சில இடங்களில் நிலைகொண்டிருந்த பாகிஸ்தானியர்கள் இப்போது
வெளியேறி விட்டனர் என்ற ஒரு கருத்து அங்கு கூறப்பட்ட போதும், இல்லை அவர்கள்
இன்னும் இருக்கின்றனர் என்ற தகவலும் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்று
அறியவந்தது.
இப்படி ஏதேனும் ஆவணங்கள் கையளித்தீர்களா, அவற்றின் விவரம் என்ன என்று
சுமந்திரனிடம் கேட்ட போது அதற்குப் பதில் தர அவர் மறுத்து விட்டார்.
எனினும், சந்திப்பில் பங்குபற்றிய தரப்புகள் அத்தகைய ஆவணங்கள் சில தமிழரசுக்
கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்தின.
