‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பேரழிவுகளின் தாக்கம் காரணமாக, இலங்கையில் 5,61,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இந்த பேரழிவால் 4 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் பாதுகாப்பு அபாயத்தில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை பெறுவது கடினமாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரழிவால் சேதமடைந்த அடிப்படை கட்டமைப்புகளை மீளமைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குழந்தை பாதுகாப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக இன்னும் குறைபாடுகள் நிலவுகின்றன என்றும் யுனிசெஃப் எச்சரிக்கிறது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குழந்தை நட்பு சூழலை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுத்தமான நீர் வழங்குதல், உளச் சுகாதார ஆதரவு வழங்குதல், ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு கூடுதல் உதவிகளை வழங்க யுனிசெஃப் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்த சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
