Home இலங்கை சமூகம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பாரா கிழக்கின் புதிய ஆளுநர்..!

சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பாரா கிழக்கின் புதிய ஆளுநர்..!

0

Courtesy: H A Roshan

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரகாரம் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் பதவி விலகியதை அடுத்து புதிய மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்ட ஜயந்த லால் ரத்னசேகர நியமனம் செய்யப்பட்டு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை 26.09.2024ஆம் திகதி அன்று பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாணம் அதிகூடிய தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை கொண்ட மாகாணம். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் 

கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த செந்தில் தொண்டமான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எது எவ்வாறாக இருந்தாலும் பல மக்கள் பிரச்சினைகளை கொண்ட மாகாணமாக காணப்படுகிறது. நில அபகரிப்பு, சட்ட விரோத மண் அகழ்வு, விவசாய கடற்றொழில் என பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து பல சவால்களை எதிர்கொண்டனர்.

தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட ஆளுநர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவராக இருக்கிறார். தமிழ் மொழியிலும் உரையாடக்கூடிய ஒருவராக காணப்பட்டாலும் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

மட்டக்களப்பில் மயிலத்தமடு பிரச்சினை, திருகோணமலையில் மக்கள் தனியார் காணிகள் துறைமுக அதிகார சபையால் அபகரிப்பு, பல ஏக்கர் காணிகள் அரிசி மலை விகாரைக்காக வர்த்தமானி இடப்பட்டமை, தொல்பொருள் என்ற போர்வையில் காணி அபகரிப்பு, பல ஏக்கர் வயல் நிலங்களை அபரித்த வனஜீவராசிகள் திணைக்களம் என பலதரப்பட்ட மக்கள் பிரச்சினைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். இது அனைத்தும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளாகும். 

தமிழ் பொதுவேட்பாளர் 

இம்முறை 2024ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று 42.31 சதவீதத்தை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார். இவருக்கு வடக்கு – கிழக்கு மக்கள் பெரும்பான்மையாக வாக்குகளை அளிக்காவிட்டாலும் தென்னிலங்கை வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார்.

இதனால், வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகள் வாக்குகளை வைத்து தீர்மானிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்று சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளை பெற்று 32.76 சதவீதத்தை பெற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்க 2,299,767 வாக்குகளை பெற்று 17.27 சதவீதத்தை பெற்றுள்ளார். 

இருந்த போதிலும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பா. அரியநேத்திரன், 226,345 வாக்குகளை பெற்று 1.7 வீதத்தை பெற்றிருப்பது வடக்கு – கிழக்கு மக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான ஒரு அடித்தளமாக நல்ல செய்தியை தமிழ் கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் எடுத்துகாட்டாக விளங்குகிறது.

தமிழ் கட்சிகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பு மூலமாக வேட்பாளர்கள் வடக்கு – கிழக்கில் இறக்கப்படுவார்களானால் தமிழ் மக்களுக்கு மேலும் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வழியமைக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இம்முறை பொது தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நால்வரும், மட்டக்களப்பில் ஐவரும், திகாமடுல்ல மாவட்டத்தில் ஏழு உறுப்பினர்களும் தெரிவாக உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவதை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

அதுபோன்று, தமிழ் பொது கட்டமைப்பின் ஊடாக தொடர்ச்சியான முன்னெடுப்புக்களால் களத்தில் இறங்கினால் மக்கள் பிரதிநிதிகளை நிச்சயம் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாது. இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. 

நல்லாட்சி அரசாங்கத்தில், ரணில், மைத்திரி ஆட்சியில் கிழக்கு மக்களுடைய காணி பிரச்சினைகள் முழுமையாக தீராமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. இம்முறை அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி பொறுப்பை ஏற்றதன் பின் நாட்டு மக்களுக்கு நல்ல பல விடயங்களை கூறியுள்ளதோடு ஊழல் அற்ற நாட்டை உருவாக்குவதாக கூறியுள்ளார். 

மேம்படுத்த திட்டங்கள் 

இது எதிர்காலத்தில் நடைமுறையில் சாத்தியமாக்கப்பட்டால் நன்று. ஆனாலும், புதிய கிழக்கு மாகாண ஆளுநரும் தமிழ் பேசும் மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து சமூக, பொருளாதார, கல்வி துறைகளில் முன்னேற்றமடைய செய்ய வேண்டும். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற வகையில் சுதந்திரமாக வாழ வழியமைத்துக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.

கிழக்கில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட ஜீவனோபாயமாக கடற்றொழில், விவசாயம் என பாமர மக்கள் வாழ்க்கை காணப்படுகிறது.

எனவே, இன, மத பேதமற்ற முறையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை வகுப்பதுடன் சமூக நல்லிணக்கம் ஊடாக மாகாணத்தை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதே எல்லா மக்களினதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version