கிண்ணியா பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்
இடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நில மீட்புப் போராட்டமும் மோதல்களும்
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு
செய்யப்பட்ட கலந்துரையாடலின்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கால்நடை
வளர்ப்பாளர்கள் கூட்டத்தை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.
உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களையும் பயிர்களையும் பாதுகாப்பான வேலிகளை
அமைத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கால்நடை வளர்ப்பாளர்கள், கால்நடைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் அவற்றைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இனிமேல், வேளாண்மைப் பயிர்களைக் கால்நடைகள் சேதப்படுத்தினால், அதற்கான
முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்கும் பட்சத்தில் குறித்த கால்நடை
உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கால்நடைகளை வெட்டுவதற்கோ அல்லது சேதப்படுத்துவதற்கோ எவருக்கும் உரிமை
கிடையாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த, “வேளாண்மைப் பயிர்களை வேலி போட்டுப்
பாதுகாப்பது விவசாயிகளின் பொறுப்பு, மாடுகளை வேளாண்மை நிலத்துக்குச்
செல்லவிடாது பாதுகாப்பது கால்நடை வளர்ப்பாளர்களின் பொறுப்பு” என்ற கருத்தை
கால்நடை வளர்ப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்சினையில், 2876 ஹெக்டேயர்
நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம்
28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
எனினும், குறித்த பகுதிக்கு தற்போது விவசாயிகள் அத்துமீறிக் குடியேறி
விவசாயம் செய்து வருவதாகவும், இது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல்
எனவும் கால்நடை வளர்ப்பார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
