பெண்களுக்கு எதிராக துர்நடத்தைகளிலும், வன்முறைகளிலும் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து மேலதிகாரிகளின் உதவிகளுடன்
தப்பிக்கும் நிலைமை காணப்படுகின்றதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று (7) நடத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பிரச்சினை
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெண்கள் சமூகத்தில் குறிப்பாக வேலைத் தளங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை
எதிர்கொள்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக பாடசாலைகளிலும் மாணவிகள் பல்வேறு
சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள்.
ஊடகங்களைப் பார்க்கின்ற உங்களுக்கு நிச்சயம்
இவை தெரிந்திருக்கும்.
எமது சமூகத்தில் தற்போது இடம்பெறும் சமூகப்பிறழ்வுகளால் அதிகம்
பாதிப்புக்குள்ளாவதும் பெண்களே.
உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான
ஆண்களால் பல பெண்கள் துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். சொந்தச்
சகோதரிகளைக் கூட இவ்வாறு துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவங்கள்
வடக்கில் பதிவாகியுள்ளன.
பெண்களின் உரிமை
வெளியில் இவற்றைச் சொன்னால் தமது எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சி
பல பெண்கள் வெளிப்படுத்த தயங்குகின்றனர். இவற்றை முறியடிக்க வேண்டும்.
இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிராக
வன்முறைகளிலோ, துர்நடத்தைகளிலோ ஈடுபடுவர்கள் தராதரம் பாராமல் தண்டிக்கப்பட
வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மிக முக்கியமாக நாங்கள் ஒவ்வொரும் எங்களுக்கு
உறுதி பூண வேண்டும்.
நாங்கள் ஒவ்வொருவரும் மாறினால் சமூகம் மாற்றமடையும்.
பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கு ஒவ்வொருவரும் தயாராகினால் சமூக மாற்றம்
தானாகவே ஏற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
