Home இலங்கை சமூகம் காணி அபகரிப்பு உரிமை மீறல் : மனித உரிமைகளுக்காக காத்திருக்கும் மக்கள்

காணி அபகரிப்பு உரிமை மீறல் : மனித உரிமைகளுக்காக காத்திருக்கும் மக்கள்

0

Courtesy: H A Roshan

பொது மக்களின் காணிகளை அரச திணைக்களங்கள் கபளீகரம் செய்து எல்லையிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் இது தொடர்பில் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்காக அரசியலமைப்பில் சொல்லப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அண்மையில் (30.09.2024) தெரிவித்தனர்.

இராணுவ முகாம் அமைப்பு

குறித்த பகுதியில் வசித்துவந்த 31 குடும்பத்தினர்களது 42 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் அந்த காணிகளில் 35 ஏக்கர் காணிப்பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக முறையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீளக் குடியேற முற்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது கையகப்படுத்தியதோடு யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகிய நிலையில் குறித்த காணிகளில் இற்றை வரை மீளக்குடியேற முடியாதிருப்பதன் காரணமாக அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு வந்திருந்தனர்.

1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்ததன் பின்னர் 1990களிலும் இடம்பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அதன் பின்னராக வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த பகுதியில் எல்லையிட்டதன் பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை நெற்பட்டிருந்ததுடன் அவ்வாறு எல்லையிடப்பட்ட பகுதிகள் அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க்கடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் 

மேலும் அது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும் தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட வருகை தந்திருப்பதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் வடகிழக்கு சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் கேள்விக்குறியே தற்போது இடது சாரி கொள்கை கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இது தொடர்பில் தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் .

ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு மக்களது ஆதரவு குறைவு அது போன்று வாக்குகளும் குறைவாகவே கிடைத்தன

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து களநிலவரம் எப்படி அமையப்போகிறது என்பது பற்றி எம்மால் ஊகிக்க முடியாது.

தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றாக வேட்பாளர்களால் கூறப்படும் ஒன்றே காணி விடுவிப்பு இது நடந்தால் சந்தோசம்.

கிழக்கு மாகாணத்தில் பல ஏக்கர் வயல் நிலங்கள், விவசாய, குடியிருப்பு பூமிகளை தனியாருக்கு சொந்தமானதை எல்லையிட்டு அபகரிப்பு செய்துள்ளனர்.

31 விகாரைகள் கட்டுமானப் பணி

இவ்வாறான தனியாருக்கு சொந்தமான மக்கள் காணிகளை வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை போன்றன கையகப்படுத்தியுள்ளதால் அன்றாட ஜீவனோபாயத்தில் பல்வேறு அசௌகரியங்களை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடளித்த ஐயா சாமி கிருஷ்ண ரூபன் இவ்வாறு தெரிவித்தார். ” வெல்வேறியன் காணி எங்களுக்கு சொந்தமானது தற்போது வனதிணைக்களத்தினர் எல்லையிட்டு எங்களை அங்கு செல்லாது தடுத்து நிறுத்துவதுடன் நில அளவைத் திணைக்களம் பிரதேச செயலகம் ஊடாக தெரியப்படுத்திய போது அது ஹெட்டியாராச்சி என்பவருக்கு சொந்தமான காணி என தெரிவிக்கின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்களம் என்று எல்லையிடப்பட்ட போது எப்படி இவ்வாறு கூறுவது . எனவே சட்டரீதியாக பல விடயங்களை செய்தபோதும் தோல்வி கண்டுள்ளோம். இறுதியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புகாரளிக்க வந்தோம் ” என்றார்.

இது தவிர திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பகுதியில் சுமார் 2000 ஏக்கர் காணிகள் விகாரைக்காக ஒதுக்கப்பட்டு 31 விகாரைகள் கட்டுமானப் பணிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விவசாய காணிகள் 

திரியாய் பகுதியில் 3000 ஏக்கர் மக்களது விவசாய காணிகள் சூறையாடப்பட்டு அரச திணைக்களங்கள் சில கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

“1970களில் எங்கள் காணிகளில் குடியிருந்து யுத்த சூழ் நிலை காரணமாக 1977ல் அங்கும் இங்கும் ஓடி இடம் பெயர்ந்த போது மீண்டும் எமக்கு அந்த காணிகளை வழங்காது இரானுவத்தினர் வனஜீவராசி திணைக்களத்தினர் கையகப்படுத்தியதை அறிய முடிகிறது. எங்கள் பூர்வீக பூமி எங்களுக்கு வேண்டும் ” என வயோதிப பெண் ஒருவர் தனது காணி இழந்ததை பற்றி இவ்வாறு விபரித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களது விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளதாகவும் இதனை அரச திணைக்களங்களான தொல்பொருள், வனஜீவராசி, துறை முக அதிகார சபையினர்களே இவ்வாறு அடாத்தாக கையகப்படுத்தியதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அண்மையில் மக்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஆனாலும் இதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தது பற்றி விபரங்கள் வெளியாகவில்லை.

தேர்தல் கால வாக்குறுதிகள்

தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளி வீசுவார்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

“எங்களுடைய நிலத்தை பெற்றுத் தாருங்கள் தற்போதைய ஜனாதிபதி இலஞ்ச ஊழலற்ற நாட்டை உருவாக்குவதாக கூறுகின்றார் எமக்கான காணிகளை பெற்றுத் தாருங்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடத்தில் இருந்து விடுவியுங்கள் ” என காணி உரிமையாளர் இதன் போது தெரிவித்தார்.

நில அபகரிப்பை நிறுத்தக்கோரிய போராட்டங்கள் வடகிழக்கில் கடந்த அரசாங்கத்திலும் இடம் பெற்றன.

முழுமையான தீர்வு கிடைக்கவில்லை தற்போதைய அரசாங்கம் இம் மக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பார்களா என அங்கலாய்க்கின்றனர்.

தமிழ், முஸ்லிம் சமூகம் காலா காலமாக பல விவசாய , குடியிருப்பு பூமிகளை இழந்து தவிக்கின்றனர் இந்த அரசாங்கத்துக்கு சிறுபான்மை சமூகமும் ஆதரவளித்திருந்தனர் இருந்த போதிலும் திருப்திப்படக்கூடிய தீர்வு கிட்டுமா என்பது கேள்விக்குறியே.

NO COMMENTS

Exit mobile version