அனர்த்தங்களுக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு
முன்னர் அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களில் உள்ள தங்குமிடங்களில்
தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகள் தரும் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்களை செயற்படுமாறும் அவர்
பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தமுகாமைத்துவம் தொடர்பில் ஆராயும் விசேட
கூட்டங்கள் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சீரற்ற காலநிலை அனர்த்தங்கள்
இதன்போது கருத்து தெரிவித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழு மற்றும் பிரதேச சபைத்
தவிசாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை
மேற்கொண்டிருந்தோம். இதில் நாங்கள் நிறைய விடயங்கள் தொடர்பில் தெளிவுபெற்றோம்.
முதலில் நாங்கள் மகாவலி மற்றும் மல்வத்து ஓயா உட்பட உயர் பிரதேசங்களில்
இருந்து வரும் வெள்ள நீர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவதால் இந்த
மக்களுக்கு ஏற்படும் தீமைகளைத் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.
நாம் எதிர்பார்க்கின்றோம் சாதாரண நிலைமைகளை விட எதிர்வரும் தினங்களில் இன்னும்
அதிகமான நீர் மட்டக்களப்பிற்குள் வரலாம் என்று.
தற்போதும் இத்தனை மாதங்கள்
ஒன்று சேரும் நீரின் அளவு ஒரே நாளில் மட்டக்களப்பிற்கு வந்துள்ளது.
அந்தளவுக்கு உயர்பெறுமான நீர்மட்டம் மட்டக்களப்பு நகரை அண்டியும், பிரதேசங்கள்
பலவற்றிலும் நிறைந்துள்ளது.
725 குடும்பம்பங்களைச் சேர்ந்த 2178 பேர் தற்போது பாதுகாப்பாக தங்க
வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான உணவு உட்பட அனைத்து வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை விட பல மடங்கு மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற
நிலைப்பாடு அனர்த்த முகாமைத்துவக் குழுவினால் வெளிப்படுத்தப்படுகின்றன.
அதே
போல் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற தகவல்களின்
அடிப்படையில் ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அதனால் அவ்வாறானவர்களை உரிய பாதுகாப்பு இடத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகளை
எதிர்வரும் நாட்களில் நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு
முயற்சிக்கின்றோம். இதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும், அனர்த்த
முகாமைத்துவக் குழுவினரும், பொலிஸ், முப்படையினரும் மிகவும் அர்ப்பணிப்புடன்
கடமையாற்றி வருகின்றனர்.
விசேடமாக தற்போதைய நிலையில் எமக்கு பிரச்சனையாக உள்ளது குடிநீர் வசதியை
ஏற்படுத்திக் கொடுப்பது. குடிநீரை விநியோகிக்கும் பிரதான நிலையங்களுக்கான
எரிபொருள் வசதி இல்லாவிட்டால் குறித்த நிலையங்களின் இயந்திரங்களைச்
செயற்படுத்துவதற்கு முடியாமல் போகும்.
தற்போதும் இது பிரச்சினையாக
உருவகியுள்ளது. எரிபொருள் தேவையான அளவு பெற்றுக் கொடுத்து குடிநீர் வசதியை
தொடர்ந்து பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிலைமைகளுக்கு நாளையில் இருந்து முகங்கொடுப்பது
தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது. விசேடமாக அவதானமான போக்குவரத்துப்
பாதைகள் சுமார் 10 வரையில் தேர்வு செய்துள்ளோம். சிறு பாலங்கள், போக்குகள்
உடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பாலங்கள் பாவிப்பதனை நிறுத்துமாறு
மக்களுக்கு நாம் தெரிவித்துள்ளோம்.
மட்டக்களப்பில் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுவது வழமை என்று கருதி மக்கள் இறுதிவரை
வீடுகளில் தங்கி நிற்பார்கள். அந்தப் பிரச்சனைகள் தொடர்பில் பார்ப்பதற்காக
பாதுகாப்புப் பிரிவுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்களுக்கு முழுமையான
விளக்கம் கொடுத்து மிக விரைவில் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்து வருவதற்கு
அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
நாளையில் இருந்து அந்த நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
மக்களும் இறுதிவரைக்கும் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டாம். முதலாவது உயிர்
பாதுகாப்பு. சொத்துக்கள், பொருட்களைக் கொண்டு வருவது பிறகு. மக்கள் அரச
உத்தியோகத்தர்களின், பாதுகாப்புப் பிரிவினரின் வேண்டுகோள்களுக்கு
செவிமடுக்குமாறு மக்களிடம் நாம் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு என்ற
ரீதியிலும், அனர்த்த முகாமைத்துவக் குழு என்ற ரீதியிலும் தயவான வேண்டுகோளை
முன்வைக்கின்றோம்.
நாட்டின் நிலைமை திடர்பில் ஏதோவொரு அளவீடுகளை மேற்கொண்டு தான் பாதுகாப்புப்
பிரிவு நீர் மட்டம் உயர்வது தொடர்பில் தீர்மானிக்கின்றது. மற்றையது
மட்டக்களப்பு பிரதேசத்தில் உயரமான பகுதிகள் மிகக் குறைவு அனைத்தும் ஒரே
மட்டமான இடங்கள்.
எனவே நாங்களை மக்களை உயரமான பகுதி என விசேட இடங்களில் தங்க
வைப்பதென்பது கடினம். எனவே மக்களை நாம் பாதுகாப்பன தங்கு இடங்களுக்கு
அழைத்துச் செல்லத் தீர்மானித்தான் உடனடியாக அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான்
மக்கள் எமக்குச் செய்யும் பெரிய உதவி.
இக்காலத்தில் மற்றைய மாவட்டங்களில் இருந்து உதவிகள் பெற்றுக் கொள்வதென்பது
மிகவும் கடினம். ஏனெனில் அனைத்து மாவட்டங்களும் ஒரே நிலைமகளுக்கு
உள்ளாகியுள்ளமையால் எதிர்வரும் நாட்கள் மட்டக்களப்பிற்கு மிகவும் முக்கியமானவை
என நான் கருதுகின்றேன்.
எனவே அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கிராமசேவை
உத்தியோகத்தர்கள் மற்றும் விசேடமாக பாதுகாப்புப் பிரிவினரின் வேண்டுகோள்களை
மதித்து நடக்கவும் என மக்களிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
பாதுகாப்பு தங்கு நிலையங்களுக்கு வராத மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே
சென்று உதவிகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
எமது சுற்றுநிரூபத்தின்
அடிப்படையிலும் இதனை மேற்கொள்ள முடியும். விசேடமாக ஆலயங்களுக்கும் நாம்
வேண்டுகோள் விடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான
நடவடிக்கை முன்னெடுக்குமாறு.
முகாம்களுக்கு வரமுடியாது விட்டாலும் கிராம
சேவையாளர்கள் ஊடாக அவர்களது உணவு தேவைகளை பிரதேச செயலாளர்களுக்குத்
தெரியப்படுத்தவும், அனைவருக்கும் சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்கள்
வழங்குவதற்கு வழி செய்துள்ளோம். முகாமுக்கு வந்தாலும் வராவிட்டாலும்
பாதுக்கபட்ட மக்களுக்கான உணவு தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்குமாறு ஜனாதிபது அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரத்னசேகர,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,அனர்த்த முகாமைத்து பிரதி பணிப்பாதளர் ஷியாத்,கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர உட்பட திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,பாதுகாப்பு பிரதானிகள்,தவிசாளர்கள்,என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
