லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்(CIABOC) அதிகாரி என்ற போர்வையில் போலியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, பொலன்னறுவையில் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொலன்னறுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குழு GPS கண்காணிப்பு மேலாளராக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலி அடையாள அட்டை
ஆணைக்குழுவிற்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
CIABOC இன் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைப் போன்ற போலி அடையாள அட்டையைத் தயாரித்து, அதை ஆணைக்குழு அதிகாரியாகக் காட்டி, அரசாங்க அதிகாரிகளை அவர்களின் கடமைகளின் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்துவதற்காகப் பயன்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
அத்தோடு, இவ்வாறான சந்தேகத்துக்கிடமான நபர்கள் குறித்து 1954 என்ற ஹாட்லைனைத் தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்குமாறு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
