ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்
தெஹிவளை மற்றும் கொஹவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த 25 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்ததாக கூறப்பட்ட பொருட்கள் போதைப்பொருட்கள் அல்ல
என்பதை அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் வெளிப்படுத்தியதை அடுத்து, கல்கிஸ்ஸை
நீதவான் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் துரதிஸ்டவசமாக, அவர்களில் ஒருவர் வீடு திரும்பிய பின்னர் தனது உயிரை மாய்த்து கொண்டார்,
தாம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சந்தித்த
பிரச்சினைகளால் மனமுடைந்த நிலையிலேயே அவர் உயிரை மாயத்து கொண்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவருக்காக முன்னிலையான கீத்மா
பெர்னாண்டோ, பொலிஸார் தனது கட்சிக்காரர் மீது பொய்யான குற்றச்சாட்டை
சுமத்தியதாக குறிப்பிட்டார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு பொலிஸ்தரப்பு பதிலளிக்கவில்லை.
அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட சந்தேக
நபர்களில் பலர் ஒன்பது மாதங்கள் வரை தடுப்புக்காவலில் இருந்துள்ளனர் என்பதும்
தெரியவந்துள்ளது.
இதில், உயிரை மாயத்து கொண்டவர் முன்னதாக 3.2 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக
பொலிஸார்; குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் அது பொய்யான குற்றச்சாட்டு என்பது அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையில்
இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தனது சகோதரனின் இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டபோது
நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த பாதிக்கப்பட்டவரின் சகோதரி, தனது சகோதரர்
மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டபோது திறந்த நீதிமன்றத்தில் கதறி அழுதார்.
