அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை தீ வைத்து கொழுத்திய பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவ்பொத்தானை, கபுகொல்லாவை பகுதியை சேர்ந்த 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயதான சிறுமிக்கு பேய் விரட்டுவதாக கூறி உடலில் தீ மூட்டிய நிலையில், பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேய் விரட்டும் நிலையம்
அந்தப் பகுதியில் சீதா மைனியன் என்ற பெயரில் பேய் விரட்டும் நிலையம் ஒன்றை குறித்த பெண் நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மந்திரவாதியான பெண்ணிடம் மகளை பிடித்துள்ள பேயை விரட்ட பெற்றோர் சென்றுள்ளனர்.
இதன்போது சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த மந்திரவாதி பெண்ணின் செயலினால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
