கடந்த காலத்தில் தமக்கு உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டதாகவும் இன்று எவ்விதமான மானியங்களும் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு (S.Shritharan) இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (15)
பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினை
தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது எடுத்துரைத்தனர்.
மோசமான விளைவு
அத்துடன் வழங்கப்படும் விவசாய உள்ளீடுகள் கிருமிநாசினிகள் தரமற்றவை என்றும்
இதனால் தமது உற்பத்திகளில் பாரிய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக வெங்காய உற்பத்தி, உருளைக்கிழங்கு உற்பத்திகளன் போது விளைச்சலைப்
பெறுகின்ற காலத்தில் அரசாங்கம் தடைகளின்றி வெளிநாடுகளில் இருந்து வெங்காயம்,
உருளைக்கிழங்கு போன்றவற்றை இறக்குமதி செய்வதாகவும் இதனால் தமது உற்பத்திக்கு கேள்விகளற்றுப் போய் விடுகிறது எனவும் தெரிவித்தனர்.
எனவே இந்த விடயங்களை நாடாளுமன்றில் எடுத்துரைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்
இந்தநிலையில் இதற்குப் பதிலளித்த சிவஞானம் சிறீதரன், “விவசாயிகளின் உற்பத்திகள் பாதிப்படைவது
போல் கடல்வளங்களும் வெளிநாட்டு இந்திய கடற்றொழிலாளர்களினால் அழிக்கப்படுகிறது.
இங்கு
உங்களது உற்பத்திகளுக்கு கேள்விகளற்றுப் போகிறது. வெளிநாட்டு உற்பத்திகள்
இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்திகள் தேங்கி அழிவடைந்து செல்கிறது.
குறித்த விடயங்கள் பற்றி நிச்சயமாக நாடாளுமன்றில் எடுத்துரைப்பேன். இவ்வாறு
தான் கிளிநொச்சி விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் விவசாய அமைச்சரிடம் கேள்வி
நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இருவாரங்களில் பதில் அளிப்பதாக
சபையில் வைத்துக் கூறி இன்று இரண்டு மாதங்களைக் கடந்து விட்டது, ஆனால் இது வரை
அமைச்சர் பதில் தரவேயில்லை” என தெரிவித்தார்.
