தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதி அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ளது. இன்று காலை குறித்த விடுதியில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மாணவர்களுக்கு எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
எனினும், பல பொருட்கள் தீயில் எரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு குழுவினர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் ஏற்பட்டதா என விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
