கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர், நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதி கோரியுள்ளார்.
பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் நேற்று (10) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனினும் மீண்டும் ஒருமுறை சிந்தித்து இந்த கோரிக்கையை விடுக்குமாறு நீதவான் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசேட பாதுகாப்பு
ஆனால் அதற்கு அனுமதியளிக்காத நீதிமன்றம், சந்தேக நபர்களை ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
சிறைச்சாலையில் பெட்டி என்ற குற்றவாளியின் நன்பர்கள் இருப்பதால் சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா, கடந்த 08ஆம் திகதி அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்போது பிரபல பாடகி கே.சுஜீவாவின் கணவர் நயன வாசுலவும் மரணமடைந்ததுள்ளார்.
இறுதி அஞ்சலி
இவர்களில் கிளப் வசந்தவின் மனைவியும் பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாடகி கே. சுஜீவவின் உடல்நிலை தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
கிளப் வசந்தவின் இறுதிக் கிரியை எதிர்வரும் சனிக்கிழமை பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதுடன் பூதவுடல் நாளை (12) காலை 8.30 மணிமுதல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.