நுவரெலியா – பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே, கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகரசபை மண்டபத்தில் இன்று (18) நடைபெற்ற
ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர
இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “நுவரெலியா மாநகரசபை
கட்டுப்பாட்டிலுள்ள நுவரெலியா கிறகறி வாவியின் அணைக்கட்டு வான் கதவுகள்
திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில்
நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிறகறி வாவியின் இரண்டு
வான் கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது
பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா
நீரோடையில் நீர் பெருகெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது.
முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்
அத்துடன், நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோதக் கட்டிடங்கள், கால்வாய்கள் குறுகியதாக
மாறியிருப்பது மற்றும் கிரகறி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக்
காரணமாக அமைந்துள்ளன” என தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி,
நுவரெலியா குதிரைப்பந்த திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம்,
நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்ததால் மழை நீர்
நிரம்பியும் மண்சரிவுகளும் பல பாதிப்புக்களும் ஏற்பட்டன. அவர்களுக்கு
தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகரசபை முன்னின்று செய்து வருகிறது.
நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத் துறையையும், சுற்றுலாத்
துறையையும் , பாதிக்கப்பட்ட வர்த்தக துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும்
பழையநிலைக்கு நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை
ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால,
இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு
நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும்
குறிப்பிட்டார்.
