நல்லூர் பிரதேச சபையினால் வாய்க்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது
எனக்கோ அல்லது எமது சபை உறுப்பினர்களுக்கோ தெரியாது, மக்களே சென்று நேரில் எதிர்த்தனர் என வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்கு, நல்லூர் பிரதேச சபை எல்லையில் உள்ள வெள்ள,
வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு
சென்ற கடற்தொழில் அமைச்சர், மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு,
சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவித்ததுடன், அது தொடர்பில் வலி.கிழக்கு
பிரதேச சபை தவிசாளர் மீது குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வலி, கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு
அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரை வெட்டி விட முடியாது
அந்த அறிக்கையில், “வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான இருபாலை, கல்வியங்காடு
பிரதேசத்தின் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில்
குடியிருக்க முடியாதளவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வெள்ளத்தினை அகற்ற முடியாதுள்ளது.
அவ்வாறான சூழ்நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முறையான தீர்வை
முன்வைக்காது தாழ் நிலம் என்ற காரணத்திற்காக ஏனைய பகுதிகளின் நீரை குறித்த
குடியிருப்புக்களுள் முழுமையாக வெட்டி விட முடியாது.
அவ்வாறு வெட்டி விடுவதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை வலி கிழக்கின்
இருபாலை மற்றும் நல்லூர் பிரதேச சபைக்கும் வலி கிழக்கிற்குமான கல்வியங்காடு
பகுதி மக்களை குடி எழுப்புதாக அது அமையும்.
வெள்ளம் ஒரிடத்தில் நிற்கக் கூடாது என்பதற்காக ஒரு பகுதி மக்கள்
குடியிருப்பினை வெள்ளக்காடாக மாற்ற முடியாது. அனர்த்த முகாமைத்துவக்கொள்கையும்
அறிவு சார் அணுகுமுறையையும் நாம் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.
வெள்ளம் வழிந்தோடும் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தம்போது ஒருபகுதி மக்கள்
பாதிக்கப்படாது பரவலாக வெள்ள சமநிலை ஒன்றை பேணும் கொள்கையை நாம்
கொண்டுள்ளோம்.
இதே அணுகுமுறை புத்தூர் கிழக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு – தெற்கு
பகுதிகளிலும் பின்பற்றப்படுகின்றது.
இங்கு பிரதேச சபை எல்லை வேறுபாடுகள் கிடையாது.
கட்சி அரசியல்வேறுபாடுகள்
கிடையாது. ஒருதரப்பினர் முழுமையாகப் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில்
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை ஒரு தரப்பிற்காக அல்லது வசதி
படைத்தவர்களுக்குச் சாதகமாக மாற்றிவிடமுடியாது.
மக்களே சென்று நேரில் எதிர்த்தனர்
ஏற்கனவே நல்லூர் பிரதேச சபையில் இருந்து வெள்ள நீரை வலிகாமம் கிழக்கிற்குள்
கொண்டு வருவதற்கான வாய்க்கால் கட்டுமானம் பற்றிய சம்பாசணைகள் ஆரம்பிக்கப்பட்ட
போது தாழ் நிலமாக உள்ள வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில்
தடையில்லை.
ஆனால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மக்கள்
குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக்
கூடிய இடங்களுக்கான கால்வாய்கள் பொறிமுறைகள் உரியவாறு அறிவுசார் நிபுணர்
அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
அதற்கான பெரும் நிதியை
தேடுகின்றோம்.
தற்போதைய அனர்த்தத்தில் கூட மேற்படி வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட
போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில்
தடைகளை ஏற்படுத்தவில்லை.
நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கின் ஒருபகுதி மக்களே சென்று நேரில்
எதிர்த்தனர். அதனாலேயே வாய்க்கால் வெட்டுவது தடைப்பட்டது. மேற்படி வாய்க்கால்
பிரச்சினையில் பிரதேச வேறுபாடுகள் கிடையாது.
வட்டாரங்களின் அடிப்படையில் கல்வியங்காடு எமது சபைக்குரிய வட்டாரம் அதன்
வெள்ளமும் மேற்படி வாய்காலினுடாக வெளியேறவேண்டும். அதுபோல வெள்ளம் தாக்கக்
கூடிய பகுதியில் நல்லூர் பிரதேச வட்டாரமும் அடங்கியுள்ளது.
ஆகவே இங்கு மக்கள் கேட்பதும் நாம் செயற்படுவதும் அனர்த்த முகாமைத்துவத்தின்
அடிப்படையில் குறைந்த பட்ச பாதிப்பு சமநிலையை பேணுவதற்கே. அதனை சகலரும்
புரிந்துகொள்ள வேண்டும்.
சகலருக்கும் பாதிப்புள்ளது. அது வேதனையானது.
பிரதான வீதிகளினை அடிப்படையாகக் கொண்டு மட்டும் நாம் நடவடிக்கை எடுத்து உட்
கிராமங்களை நாம் வெள்ளத்தில் மூழ்கவிடமுடியாது. குடியிருப்புக்களையும்
நிலத்தடி நீர் முகாமைத்தவத்திலும் எமக்கு கரிசனை வேண்டும்“ என
தெரிவித்துள்ளார்.
