வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை 34 வயதான ரஷ்ய பிரஜை எனவும், சந்தேக நபர் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.
குஷ் போதைப்பொருள்
சந்தேகநபர் குஷ் போதைப்பொருளை தயாரித்து, உலக நாடுகளுக்கு விநியோகம் செய்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் நேற்று தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-403 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
1 கிலோ 50 கிராம் எடை கொண்ட குஷ் போதைப்பொருள் அவர் கொண்டு வந்த சூட்கேஸில் பஞ்சால் செய்யப்பட்ட தலையணையில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய பிரஜை கைது
கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.