கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள
அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்று, சுமார் முப்பது வருடங்களாக அடர்ந்த காடாக
வளர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை
எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பின்றிக் கிடக்கும் இந்தக் காட்டுப் பகுதி, சமூக விரோதச் செயற்பாடுகளுக்கான களமாக
மாறியுள்ளது.
இரவு நேரங்களில் இந்தக் காட்டில் போதை பாவனையாளர்களின் நடமாட்டம் மற்றும்
அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையுடன்
குறிப்பிட்டுள்ளனர்.
அநாகரிகச் செயல்கள்
இதனால் அயலில் வசிக்கும் மக்களின் நிம்மதி குலைந்துள்ளதோடு, வீடுகளுக்குள்ளேயே அச்சத்துடன்
இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அடர்ந்த காடு, பாடசாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், மாணவிகளின் பாதுகாப்பு குறித்து
பெரும் கேள்வி எழுந்துள்ளது.
சில சமயங்களில் பகல் நேரங்களில்கூட, ஒரு சில இளைஞர்கள் இந்தக்
காட்டுப் பகுதியில் மறைந்திருந்து, பாடசாலைக்குச் சென்று வரும் மாணவிகளை கிண்டல் செய்வதும், தொந்தரவு கொடுப்பதும் தெரியவந்துள்ளது.
மகளிர் மகா வித்தியாலயம் அருகே இத்தகைய அநாகரிகச் செயல்கள் நடப்பது பெற்றோரையும் பாடசாலை
நிர்வாகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க, சுகாதாரச் சீர்கேடும் தீவிரமடைந்துள்ளது.
டெங்கு அபாயம்
அடர்ந்த புதர்கள் மற்றும் செடிகள் காரணமாக இப்பகுதியில் கொசுக்கள் பெருகி,
டெங்கு நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்தக் காட்டுப் பகுதியில் அதிகளவில் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகள்
நடமாடுவதாகவும், இது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரடி உயிராபத்தை ஏற்படுத்துவதாகவும்
மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்தக் காணி, பொதுமக்களின் பாதுகாப்புக்கும் மாணவிகளின் கல்விச்
சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதால், இது குறித்து உரிய அதிகாரிகள் உடனடியாகக்
கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் பகுதியை உடனடியாகச் சுத்தப்படுத்தி, காட்டை அகற்றி, பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த
வேண்டும் என்றும், போதை பாவனையாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் இரவு நேரக்
கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கந்தளாய் பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட
மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
