பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் காலணிகளை உள்ளூர் காலணி உற்பத்தியாளர்கள் மூலம் நேரடியாக பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்
இதனடிப்படையில், கல்வி அமைச்சும் மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சும் இணைந்து புதிய திட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில், குறித்த திட்டத்தின் கீழ் 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள், 251 தொடக்கம் 500 மாணவர்கள் இடைப்பட்ட பாடசாலைகள் மற்றும் சிறப்பு தேவையுள்ள குழந்தைகள் பயிலும் பாடசாலைகளுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பள்ளி காலணிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இக்காலணிகளின் தரநிலையை இலங்கை காலணி மற்றும் ஆடை நிறுவனம் பரிசோதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தரமான காலணி
அத்தோடு, இந்தத் திட்டத்திற்காக தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் காலணி தயாரிப்பாளர்கள் மட்டுமேத் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வருட உத்தரவாதத்துடன் தரமான காலணிகளை வழங்கத் தயாரிப்பாளர்கள் சம்மதித்துள்ளதாகவும் மற்றும் பாடசாலைகளுக்கு நேரடியாக விற்பனையாளர்கள் செல்லுவதால் மாணவர்கள் தங்களுக்கு சரியான அளவிலான காலணிகளைத் தேர்வு செய்யும் வசதி கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சில பள்ளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த பிறகு, இதை பிற மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவது பொருத்தமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
