Home இலங்கை அரசியல் இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலை குறித்து கஜேந்திரகுமார் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலை குறித்து கஜேந்திரகுமார் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

0

அரசாங்கம் கெட்டித்தனமாக ஐ.நாவுக்குள்ளே இருக்கின்ற பலவீனத்தை பயன்படுத்தி
தமிழர்களுடைய இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்பு கூறல் என்ற கோரிக்கையை
முற்றுமுழுதாக முடக்குவதற்கு ஒரு யுக்தியை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு, தமிழ்
இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறல் தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள்
வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,சிவில் அமைப்புகளின்
பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இனப்படுகொலை

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறல் தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு தமிழ்
மக்கள் வரவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற பலருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவர், செயலாளர் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தவிர்ந்த மற்ற அனைத்து கட்சிகளினுடைய பிரதிநிதிகளும் அதே போன்று
மனித உரிமை சார்ந்து செயல்படுகின்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக
செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள்.

அரசாங்கம் கெட்டித்தனமாக ஐ.நாவுக்குள்ளே இருக்கின்ற பலவீனத்தை பயன்படுத்தி
தமிழர்கள் உடைய இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்பு கூறல் என்ற கோரிக்கையை
முற்றுமுழுதாக முடக்குவதற்கு ஒரு யுக்தியை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பதிலாக அரசாங்கம் புதிய சுயாதீன பொதுக்
கட்டமைப்பொன்றை உருவாக்கி அதன் ஊடாக அனைத்து விடயங்களையும் நேர்மையாக
கடைப்பிடிக்கலாம் என்ற போலியான நம்பிக்கையை ஐ.நா ஊடாகவே கட்டி எழுப்புவதற்கு
மிக தீவிரமாக செயற்படுகிறது. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ துரதிஷ்டவசமாக இலங்கை
தமிழ் அரசுக் கட்சியினுடைய செம்மணி தொடர்பான கடிதமும் அமைந்திருக்கிறது.

புதிய கோரிக்கை கடிதம் 

இந்தப் பின்னணியில் இந்த ஆபத்தை விளங்கிக் கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து
குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியையும் இணைத்து பொதுநிலைப்பாட்டிற்கு
வரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். துரதிஷ்டவசமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி
இதில் கலந்து கொள்ளவில்லை என கட்சி தீர்மானித்ததாக எமக்கு அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஒரு புதிய கோரிக்கை
கடிதம் ஒன்றை நாங்கள் தயாரிக்க வேண்டும். விசேடமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15
ஆம் திகதி வெளியிடப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய, அனைத்து மனித உரிமை
சார்ந்த அமைப்பினுடைய, அனைத்து சிவில் சமூக அமைப்பினுடைய கையொப்பங்களோடு
வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலக்கோரிக்கைகளை மீள வலியுறுத்தி இன்றைய
காலகட்டத்தில் உள்ள மேலதிக விடயங்களையும் உள்ளடக்கி கடிதம் ஒன்றை எழுதுவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனை விரைவாக வெளிக்கொண்டு வருவதற்கும் அனைத்து செயற்பாடுகளும்
முன்னெடுக்கப்படும். உள்ளடக்கம் தொடர்பாக கொள்கையளவில் ஏகமனதாக அனைத்து
தரப்புக்களும் இணங்கி இருக்கிறார்கள்.

அந்தக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களுடைய உண்மையான கோரிக்கை இவைதான்
என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தக் கோரிக்கைகளுக்கு செயல் வடிவம்
கொடுக்கக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தையும் அணிதிரட்டல்
செயற்பாடுகளையும் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்
அந்தக் கோரிக்கை கடிதம் வெளிவந்த பிற்பாடு அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version