இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(23.05.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு இனப்படுகொலையை ஒரு குற்றமாக அங்கீகரிப்பதற்கு கூட தைரியம் இல்லை.
குற்றமாக அங்கீகரிக்கப்பட்டால் நீங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும்.
சர்வதேச விசாரணை
நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள்.
இந்த அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை இனவாதிகளாக சித்தரித்து அவர்களில் இருந்து நாம் மாறுபட்டவர்கள் என தெரிவிக்கின்றது.
ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் மாறுபட்டதாகவே உள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்ற கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் திரும்பப் பெற வேண்டும்.
அவரின் இந்த கருத்து மிகவும் ஆபத்தானது.
இந்த நாட்டில் ஒரு சுயாதீன விசாரணையை நடத்தி நீதியை வழங்குமாறு நாம் கேட்கின்றோம்.
சர்வதேச விசாரணை மாத்திரமே சுயாதீன விசாரணையாக இருக்கும். ஏன் நீங்கள் அதில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
