புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்” என்ற தொனிப்பொருளின் கீழ் வடக்கு தெங்கு முக்கோண துவக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை – சிலாவத்துறை – கொக்கிலாய் ஆகிய மூன்று நகரங்களை இணைத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின் பேரில் வடக்கு தெங்கு முக்கோணம் நிறுவப்படுகிறது.
இதன் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் புதிதாக 16,000 ஏக்கர் தென்னங் காணிகளில் தெங்கு பயிரிடுவதற்காக வடக்கு பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அறுவடை தரும் தென்னங்கன்றுகளை வழங்கவும், அந்த காணிகளை மேம்படுத்தவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
தெங்கு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி
2025 முதல் 2027 வரையிலான மூன்று ஆண்டுகளுக்குள் காணிகளின் அளவை 40,000 ஏக்கராக அதிகரிப்பதன் மூலம், வட மாகாணத்தில் தென்னை கைத்தொழில்களை நிறுவுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தெங்கு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வருடாந்தம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னை விவசாயிகளுக்கு அரசாங்க மானியங்களுக்கான உரிமைப் பத்திரங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
2025 உலக தெங்கு தின நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.
சர்வதேச தெங்கு சமூகத்தின் பாராட்டுச் சான்றிதழ் இலங்கைக்கு வழங்கப்படுவதைக் குறிக்கும் சான்றிதழை சர்வதேச தெங்கு சமூகத்தின் பிரதிப் பணிப்பாளர் நுவன் சிந்தக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கினார்.
