சமையல் எரிவாயு விலை எதிர்காலத்தில் அதிகரிக்குமா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herat) தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் எரிவாயு விலையை அதிகரிக்க போவதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளனவா? எரிவாயு விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விலைகளை அதிகரிப்பதற்கு முறைமையொன்று உள்ளது அவை தொடர்பில் எரிவாயு நிறுவனங்கள் ஊடக அறிக்கைகள் மூலம் அறிவிக்கும்.
இருப்பினும், விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா? என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை
அண்மையில் ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் (Niroshan J Pieries) தெரிவித்திருந்தார்.
அத்தோடு, மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என புதிதாக நியமிக்கப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன (Channa Gunawardena) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.