அரச சேவையில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாதென்றும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கற்பனை கதையாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (18) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,”அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் எந்த வகையிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.
வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
அந்த வகையில் அரச சேவையில் நிலவும் 15,921 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஆட்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாதென்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாமும் அதே நாணய நிதியத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம். அவ்வாறு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
அரச செலவுகளைக் குறைத்து, அரச நிதியை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்.
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வழிமுறையொன்றின் ஊடாக செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த அரசாங்கத்தைப் போன்று அரசியல் இலாபத்துக்காக இதனை நாம் செயற்படுத்தவில்லை. பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதியுடன் வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச சேவை
அதற்கமைய சுகாதார சேவையில் தாதியர்கள் உட்பட அரச சேவையில் 15,921 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த நியமனங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோன்று பட்டதாரிகளுக்கும் போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு அவர்களுக்கும் உரிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும்.
இதற்காக இரு கட்டங்களாக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் கட்டத்தில் 10 அமைச்சுக்களில் நிலவும் 7,456 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன் பின்னர் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5,882 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.
