ஜனாதிபதிகள் தனது கடமையும் செய்யும் போது, மேற்கொள்ளும் சிறிய தனிப்பட்ட விடயங்களை கருத்தில் எடுப்பது பிழை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று(22) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதோடு நாமும் சட்டத்தை மதிக்கின்றோம். சட்டத்தின் வழி செல்லும் ஆட்சியை விரும்புகின்றோம்.
சிறிய விடயங்கள்
ஆனால், ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் முழுநேர வேலையாட்கள். அவர்கள் 8 மணிநேரம் வேலை செய்யும் அரச ஊழியர்கள் போல அல்ல.
நான் அமைச்சராக அரச வாகனத்தில் யாழ்ப்பாணம் சென்று அனுராதபுரத்தில் எனக்கொரு நண்பர் இருந்தால் அவரையும் சந்தித்து விட்டு அவரின் அழைப்பின் பேரில் விருந்தையும் உட்கொண்டு வருவேன்.
இதனை ஒரு தவறாக கருத முடியாது.
ஆனால், அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஆகியோர் ஊழல் செய்கின்றார்களா என்பதை விசாரிக்க வேண்டும்.
ஆகவே, எனது நண்பரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்கவிடம் இது போன்ற சிறிய விடயங்களை கருத்தில் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
