ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப் போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று(29.03.2025) இடம்பெற்ற மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு மாகாணத்து இளையோருக்கு வேலை வாய்ப்பை வழங்கிய பல தொழிற்சாலைகள் போரினால் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை வாய்ப்பின்மை எமது மாகாணத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
வளர்ச்சிப்பாதையில் மாகாணம்
அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஆனையிறவு உப்பு தொழிற்சாலையை மீள முழு வீச்சில் இயக்க ஆரம்பித்திருக்கின்றது.
ஆனையிறவு உப்புக்கு தனித்துவமான மதிப்பு இருக்கின்றது. அந்த வகையில் இதை மீளச் செயற்படுத்துவதானது சிறப்பானது.
எதிர்காலத்தில் ஆனையிறவு உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது மாகாணம் மேலும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் – தேவநாதன்
